உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்களில் அலைமோதிய கூட்டம்:  பொங்கல் கொண்டாட திரண்ட மக்கள்

பஸ்களில் அலைமோதிய கூட்டம்:  பொங்கல் கொண்டாட திரண்ட மக்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டியதால், பஸ் ஸ்டாண்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெளியூரைச் சேர்ந்த பலரும் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆர்வம் காட்டினர்.பலரும் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டியதால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல மக்கள் ஆர்வமாக வந்ததால், அந்த பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

போட்டா போட்டி

வால்பாறை பஸ்சில், இடம் பிடிக்க பயணிகளிடையே போட்டா போட்டி நிலவியது. பஸ்சின் ஜன்னல் வழியாக, கையில் இருந்த பைகளை, இருக்கையில் போட்டு இடம் பிடித்தனர்.பஸ்சில் உள்ளவர்களை இறங்கவிடாமல், வழியை மறித்து பயணியர் நின்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதே போன்று பழநி செல்லும் பஸ்களிலும், அதிகளவு கூட்டம் காணப்பட்டது. பஸ்களில் இடம் பிடிக்க பயணியரிடையே போட்டி நிலவியது. பயணியர் கூறியதாவது:பண்டிகை நாட்களில், இதுபோன்று பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த முறையும் வால்பாறை செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. பஸ்சிற்காக அதிக நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.வால்பாறைக்கு செல்ல வாடகை கார்களில், நபருக்கு, 350 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், வேறு வழியின்றி அதி கட்டணம் கொடுத்து சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, பண்டிகை காலங்களில், அதிகாரிகள் முன் கூட்டியே நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பண்டிகை காலமாக உள்ளதால் வால்பாறை பஸ்சில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கமாக செல்லும் பஸ்களை விட கூடுதலாக, ஆறு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போன்று, கோவை, திருப்பூர், பழநி, மதுரை போன்ற பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை