| ADDED : ஜன 03, 2024 12:23 AM
கோவை:ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் உடைக்கப்பட்டது குறித்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த மாதம் 31ம் தேதி நள்ளிரவு, கோவை நகரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, வாலிபர்கள் சிலர் அடிதடியில் ஈடுபட்டனர். மதுபோதையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார விளக்குகளை அடித்து உடைத்தனர்.இதேபோல், சுங்கம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளும், அடித்து நொறுக்கப்பட்டன. ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் உள்ள விளக்குகள், பூங்காக்களை தனியார் மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வருகிறது.மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில், பதிவான காட்சிகளின் அடிப்படையில், விளக்குகளை சேதப்படுத்திய நபர்களின் அடையாளங்களை, திரட்டி வரும் போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.