பெ.நா.பாளையம்:கோவை அருகே உள்ள கணுவாய் தடுப்பணையில் குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல்
பாதித்து, நிலத்தடி நீர் மாசுபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க,
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.தடாகம் வட்டாரத்தில் பருவ காலங்களில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி, பெரிய பள்ளத்தில் வழிந்தோடி, சோமையம்பாளையம் தடுப்பணையை தாண்டி, கணுவாய் மேல் கீழ் தடுப்பணையை நிறைக்கிறது.கணுவாய் கீழ் தடுப்பணையில் நிறையும் மழை நீரின் ஒரு பகுதி, சின்னவேடம்பட்டி ராஜவாய்க்காலில் பயணித்து வெள்ளக்கிணறு குளத்தை நிறைத்து, பின்னர் சின்னவேடம்பட்டி ஏரியை அடைகிறது. கணுவாய் தடுப்பனையிலிருந்து வழிந்து செல்லும் நீர், சங்கனூர் பள்ளம் வழியாக கோவை மாநகருக்குள் பயணிக்கிறது. மீண்டும் குப்பை
சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால், கணுவாய் மேல், கீழ் தடுப்பணைகள் நிறைந்து, வெள்ளம் வழிந்து ஓடியது. தற்போது, தடுப்பணைகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றன. இப்பகுதியில் தற்போது, குறிப்பாக, கணுவாய் கீழ் தடுப்பணை பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கொண்டு வந்து குவிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,'சுமார், 100 ஏக்கர் பரப்பளவு உள்ள கணுவாய் கீழ் தடுப்பணையில் பருவ மழைக்கு முன்னரே, ஏராளமான குப்பைகளை இப்பகுதியில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் கொண்டு வந்து கொட்டி சென்றன. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சமீபத்தில் பெய்த மழையால் குப்பைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தூய்மையான நிலையில் இருந்த கணுவாய் கீழ் தடுப்பணையில் மீண்டும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டும் பணி துவங்கி உள்ளது. நிலத்தடி நீருக்கு ஆபத்து
இங்கு தேங்கும் மழை நீரால் பன்னிமடை, சோமையம்பாளையம், கோவை மாநகராட்சியின் துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதிகள், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகும். இதனால் திறந்த வெளி கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் நிலத்தடி நீர் பெருகி, விவசாயம் செழிக்கும். தற்போது கணுவாய் கீழ் தடுப்பணையில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் போக்கு மீண்டும் அதிகரித்து உள்ளதால், இப்பகுதி நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்' என்றனர்.
தற்காலிக செக் போஸ்ட்
இது குறித்து, பன்னிமடை ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று டன் எடையுள்ள குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை கணுவாய் தடுப்பணை சுடுகாடு அருகே கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படுகின்றன. கணுவாய் கீழ் தடுப்பணையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்காலிகமாக 'செக் போஸ்ட்' அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதையும் தாண்டி, இரவு நேரங்களில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், பிற உள்ளாட்சி பகுதிகளில் இருந்தும் மற்றும் தனியார் உள்ளிட்டோர் குப்பைகளை கொண்டு வந்து, கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். தடுப்பணை பகுதி பொதுப்பணி துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இது குறித்து அவர்கள் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை செய்ய உரிய இடத்தை தேர்வு செய்யும் பணியில், பன்னிமடை ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இடம் கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.