அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து, இன்று முதல் பணிக்குத் திரும்புவதாக தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 9ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.குறிப்பாக, அகவிலைப்படி உயர்வு தர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்க பேரவை, பி.எம்.எஸ்., ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற நல அமைப்பு மாநில துணைத் தலைவர் சேதுராம் தலைமை வகித்தார். வால்பாறை
வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.பி., தொழிற்சங்க வால்பாறை கிளை தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் செந்துார்பாண்டி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். உடுமலை
உடுமலை அரசு போக்குவரத்துக்கழக பணி மனை முன், தொழிற்சங்கங்கள் சார்பில், கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட துணை பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். அண்ணா தொழிற்சங்க மண்டலத்தலைவர் ரவீந்திரன், பி.எம்.எஸ்., நாகராஜ், பகுதி செயலாளர் காளிமுத்து, தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒத்திவைப்பு
இந்நிலையில், நேற்று மதியம், ஐகோர்ட் அறிவுறுத்தலின் பேரில், வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால், பொள்ளாச்சியில் உள்ள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து, இன்று முதல் பணிக்குத் திரும்புவதாக தெரிவித்தனர்.- நிருபர் குழு -