உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துணை தேடி பறந்ததா பாசக்கிளி? கண்ணீரில் தத்தளிக்குது குடும்பம்

 துணை தேடி பறந்ததா பாசக்கிளி? கண்ணீரில் தத்தளிக்குது குடும்பம்

ஆசையாய் வளர்த்த கிளி, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியதால், குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே கண்ணீரில் தத்தளிக்கிறது. சத்தி சாலை ராமகிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் டாக்டர் தம்பதி, ஆப்ரிக்காவை சேர்ந்த இரண்டு ' லுாட்டினோ காக்டெய்ல்' கிளிகளை வளர்த்து வந்தனர். அவர்களின் ஏழு மற்றும் நான்கு வயது குழந்தைகள் கொஞ்சி, மழலை மொழி பேசுவதை கிளி அவ்வளவு ரசிக்குமாம். காலை எழுந்ததும் வணக்கம் சொல்வது, பசித்தால் கொஞ்சி கேட்பது, கூண்டை திறந்து விட்டால் மின்விசிறி மீது அமர்ந்து கொள்வது என, எப்போதும் விளையாடி கொண்டே இருக்கும். அவ்வப்போது குழந்தைகளின் தோளில் உட்கார்ந்து, காதுக்குள் ரகசியம் பேசுமாம். குழந்தைகள் தூங்க போகும் நேரத்தில், டாக்டர் தம்பதி வீடு திரும்பி விடுவதால், அவர்களும் தூங்கும் வரை கொஞ்சல் நிற்பதே இல்லை. கடந்த 29ம் தேதி உறவினர்கள் வந்தபோது கதவை திறந்ததும், கிளி வெளியே பறந்தது. அவ்வளவு தான். வரவே இல்லை. திருப்பூர் வரை சென்று எங்கு தேடியும் கிடைக்காததால், கண்டுபிடித்து தருவோருக்கு கணிசமான வெகுமதி வழங்கப்படும் என்று, கிளியின் போட்டோவுடன் போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டினர். அதை பார்த்த பலர், 'இதோ உங்கள் கிளி; எங்கே சன்மானம்?' என்று வீட்டுக்கு வந்து போலி கிளியை காட்டியது, இன்னொரு சோகம். உயிருக்கு உயிராக பழகியவர்களுக்கு உண்மையான கிளியை தெரியாதா, என்ன? வந்த கிளி எதுவும் குழந்தைகளுடன் கொஞ்சவோ, தன் பாஷையில் பேசவோ இல்லை. விரட்டாத குறையாக, அந்நியர்கள் விலைக்கு வாங்கி வந்த, போலி கிளிகளை திருப்பி அனுப்பினர். ஆண் கிளி என்பதால் துணை தேடி சென்றிருக்கலாம்; அதன் வாழ்க்கையில் நாம் குறுக்கிட கூடாது என குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி, தங்களையும் தேற்றிக் கொள்கின்றனர் டாக்டர் தம்பதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை