| ADDED : ஆக 14, 2011 10:34 PM
பேரூர் : சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவைக் குற்றால அருவிக்கு இன்று சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை அறிவித்துள்ளது. கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட போளுவாம்பட்டி வனச்சரகத்திலுள்ள வனப்பகுதியில் பசுமையான இயற்கைச் சூழலில் கோவைக்குற்றால அருவி அமைந்துள்ளது. கோவையிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள இந்த அருவி, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலமாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, வாரந்தோறும் அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள, குஞ்சராடி மலையிலிருந்து 1,800 மீட்டர் உயரத்திலிருந்து பொங்கு நுரையுடன் மூலிகை தண்ணீரில் குளிப்பதற்கென தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே அருவிப்பகுதிக்குச் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது. சனி, ஞாயிறு நாட்கள் தவிர, அனைத்து பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், அருவியில் கூட்டம் நிரம்பி வழியும். வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, சோதனைகள் செய்தாலும் இந்த விடுமுறை நாட்களில் குப்பைகள் சேர்ந்து விடும். இதனை சுத்தம் செய்வதற்காக, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அருவிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இன்று சுதந்திர தின விடுமுறை என்பதால், கோவைக்குற்றாலத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் வாய்ப்புள்ளது. இதற்காக, அருவிப்பகுதிக்கு இன்று சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வனத்துறை முடிவு செய்துள் ளது. சுத்தம் செய்யும் பணிக்காக, நாளை (செவ்வாய்க்கிழமை) கோவைக்குற்றால அருவிக்கு யாரையும் அனுமதிப்பதில்லை என்று போளுவாம்பட்டி ரேஞ்சர் பார்த்திபன் தெரிவித்தார்.