உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "ஹைவே போலீசார் கறார் வசூல் :வாகன ஓட்டிகள் அலறல்

"ஹைவே போலீசார் கறார் வசூல் :வாகன ஓட்டிகள் அலறல்

பொங்கலூர் : கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் 'ஹைவே பேட்ரோல்' போலீசார், கட்டாய வசூலில் ஈடுபடுவதால், வாகன ஓட்டிகள் கதறுகின்றனர். கோவை, பொங்கலூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கரூர் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகள், திருச்சி, கரூர் பகுதிகளில் இருந்து வாழைக்காய் லோடு ஏற்றி வரும் வேன், ஆட்டோ, பொள்ளாச்சியில் இருந்து காங்கயம் பகுதிக்கு தேங்காய் லோடு ஏற்றி வரும் லாரி, வேன் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன. காங்கயத்துக்கும், பொங்கலூருக்கும் இடையே மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இப்பகுதியில் காத்திருக்கும் போலீசார், லோடு ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்தி, மாமூல்கறக்கின்றனர்.வாகன ஓட்டுனர்களிடம் ஆவணங்களை கேட்கும் போலீசார், சரியான ஆவணங்களை கொடுத்தாலும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி கேஸ் போடுவதாக மிரட்டுகின்றனர். மிரட்டலுக்கு பயந்து, தப்பித்தால் போதும் என்று பணத்தை கொடுத்து விட்டு செல்கின்றனர். பணம் வாங்குவதற்காகவே 'பேட்ரோல்' வாகனங்களில் ஒரு பையை தொங்க விட்டுள்ளனர். வழக்கமாக, இவ்வழித்தடத்தில் செல்லும் டிரைவர்கள் இவர்களுக்கு பயப்படாமல், ஒரு டிரிப்புக்கு 100 ரூபாய்க்கு மேல் தருவதில்லை. டிரைவர்கள் புதியவர்களாக இருக்கும் பட்சத்தில், 1,000 ரூபாய்க்கு பேரம் பேசி, 500 ரூபாய் வரை கறந்து விடுகின்றனர். போலீசாரிடம் பணத்தை பறிகொடுத்து விட்டு, சிலர் வெறுங்கையுடன் வீட்டுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் வசூல் வேட்டையால், வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. லாரி, வேன் டிரைவர்கள் கூறுகையில், 'மாமூல் வாங்குவதற்காகவே, 'ஹைவே' போலீசார் அதிகாலை 3.00 மணிக்கு ரோட்டுக்கு வந்து விடுகின்றனர். லோடு ஏற்றி வரும்போது, மிகவும் மெதுவாகவே செல்ல வேண்டியுள்ளது. மற்ற வாகனங்களைபோல், எங்களால் வேகமாக செல்ல முடியாது. இதனால், எங்களை எளிதில் மடக்கி விடுகின்றனர். பணம் கொடுக்காவிட்டால், லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்.சி., புக் போன்றவற்றை கேட்டு மடக்குகின்றனர். சரியான ஆவணங்களை கொடுத்தாலும், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மாமூல் கேட்கின்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தினால், அபராதம் அதிகமாக செலுத்த வேண்டிய சூழல் வரும். எங்களை கவனித்து விட்டால் குறைந்தளவு கொடுத்தால் போதும் என்று மிரட்டுகின்றனர்,' என்று கண்ணீர் மல்க கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை