கோவை : கோவை நகரில் இரு இடங்களில்,'எஸ்கலேட்டர்' எனப்படும் நகரும்
படிக்கட்டுகள் அமைக்கவும், வாகனங்கள் நிறுத்துவதற்காக 5 இடங்களில் 'மல்டி
லெவல் பார்க்கிங்' அமைக்கவும் நகர ஊரமைப்புத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, முக்கிய தொழில் நகரமாக இருப்பது,
கோவை. கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினமும்
பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இவற்றைத் தவிர்த்து,
நகரிலுள்ள வாகனங்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கேற்ப, ரோடுகள் மேம்படுத்தப்படாததுடன், போதிய இணைப்புச் சாலைகள்
இல்லாததால் வாகன நெரிசலும் அதிகமாகி வருகிறது. நெரிசல் ஒரு புறமிருக்க,
வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் மக்கள் அவதிப்படுவது, அன்றாடக் காட்சியாகி
விட்டது. ஒப்பணக்கார வீதி, டவுன் ஹால், காந்திபுரம் போன்ற இடங்களில், பகல்
நேரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமே கிடைப்பதில்லை. பல பெரிய
நிறுவனங்கள், கார்களுக்கு 'பார்க்கிங்' வசதி கொடுத்தாலும் டூ வீலர்களில்
வரும் வாடிக்கையாளர்களை மதிப்பதே இல்லை. இதனால், ஒரு கிலோ மீட்டர்
தூரத்துக்கு அப்பால் வண்டியை நிறுத்தி விட்டு 'ஷாப்பிங்' செல்ல
வேண்டியுள்ளது.பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாநகரில் முக்கிய இடங்களில்
'மல்ட்டி லெவல் பார்க்கிங்' (பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்) அமைக்கலாம்
என்று மாநகராட்சி நிர்வாகம், நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகிறது. நகரில்
மக்கள் நடமாட்டம் உள்ள ரயில்வே ஸ்டேஷன், காந்திபுரம், அரசு மருத்துவமனை
ஆகிய இடங்களில் சுரங்க நடைபாதையும், 3 இடங்களில் 'மல்டி லெவல் பார்க்கிங்'
அமைப்பதாக பேட்டி கொடுத்த மேயர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலின்
பதவிக்காலமே முடிந்து விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,
இப்போதாவது இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு, கோவை
மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. செயலற்றுக் கிடக்கும் மாநகராட்சி
நிர்வாகம், இதனைக் கவனிக்காத சூழலில், நகர ஊரமைப்புத்துறை இதற்கான
முயற்சிகளில் இறங்கியிருப்பது, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சுரங்க நடைபாதை மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பதற்கு சில இடங்களை
நகர ஊரமைப்புத்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்தது. அவற்றை
பரிசீலித்த நகர ஊரமைப்பு இயக்குனர் கார்த்திக், கடந்த வாரத்தில் கோவை
வந்தபோது, அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார். உக்கடம், டவுன் ஹால்
மாநகராட்சி பார்க்கிங், கிராஸ்கட் ரோடு மாநகராட்சி பார்க்கிங்,
ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்களை அவர் பார்வையிட்டு, அந்த இடங்களில் 'மல்டி
லெவல் பார்க்கிங்' அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். எத்தனை
அடுக்குகளாக 'பார்க்கிங்' அமைக்கலாம், வழி எப்படி அமைக்கலாம் என்பது பற்றி
அவர் அதிகாரிகளுடன் விவாதித்தார். வெளிநாட்டில் இருப்பது போல, கார்களை தரை
தளத்தில் நிறுத்தி, லிப்ட்' மூலமாக மேல் தளத்தில் நிறுத்த ஏற்பாடு
செய்யலாமா, எந்தெந்த தளத்தில் எவ்வளவு வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு தளம்
அமைக்க முடியும் என்பது பற்றி, மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி மற்றும்
மாநகராட்சிப் பொறியாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதற்கு நகர
ஊரமைப்புத்துறையின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதியிலிருந்து
நிதி ஒதுக்கப்படுமா என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்த இடங்களில்
'மல்டி லெவல் பார்க்கிங்' அமைக்கப்படுவதற்கான அறிகுறி தெரிய
ஆரம்பித்துள்ளது. இதேபோன்று, அரசு மருத்துவமனை, காந்திபுரம், ரயில்வே
ஸ்டேஷன் ஆகிய இடங்களில், மக்கள் சாலையைக் கடக்க வசதியாக நகரும் படிக்கட்டு
(எஸ்கலெட்டர்) வசதியுடன் கூடிய நடைபாதைகளை அமைப்பது பற்றியும் நகர ஊரமைப்பு
இயக்குனர் ஆய்வு செய்துள்ளார். காந்திபுரம் டவுன் பஸ்ஸ்டாண்டில் இருந்து
வெளியூர் பஸ்ஸ்டாண்ட் செல்வதற்காக, சாலையை கடந்து செல்வோர், 'ஸ்கைவே'
மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. வயதானவர்கள், முழங்கால் வலி
இருக்கும் பலரும், இந்த பாலத்தில் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர். வேறு
வழியில்லாத நிலையில், அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். இதேபோல,
கோவை அரசு பொது மருத்துவமனை அருகே சாலையைக் கடக்க மக்கள் படும் பாடு,
கொஞ்சமில்லை. அதனால், இவ்விரு இடங்களிலும் 'ஸ்கைவே வித் எஸ்கலேட்டர்'
எனப்படும் நகரும் படிக்கட்டுகள் அமைக்க, மாநகராட்சி சார்பில்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை ஆய்வு செய்த நகர ஊரமைப்பு
இயக்குனர் கார்த்திக், திட்டங்களுக்காகும் உத்தேச செலவு மதிப்பீட்டையும்
தயார் செய்து அளிக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆட்சியிலாவது இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்தே
பார்க்க வேண்டும்.