குறிச்சி : பஸ் படிக்கட்டுகளில் பயணிப்போரால், சாலையில் வாகனங்களில்
செல்வோரும் விபத்துக்குள்ளாகி, பலியாகும் அபாயம் உள்ளது. கோவை நகரில்
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மக்கள் போக்குவரத்துக்கு
அதிகம் பயன்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் குறைவதாக இல்லை.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம்
செய்வோரின் எண்ணிக்கை, அதிகமாகி வருகிறது. படிக்கட்டுகளில் எப்படி
பயணித்தாலும், டிக்கெட் வாங்கினால் போதுமென்ற மனோபாவத்திலேயே தனியார் பஸ்
நடத்துனர்கள் நடந்து கொள்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ,
மாணவியரில் பெரும்பாலானோர், தனியார் பஸ்களில் மட்டுமே பயணிக்க
விரும்புகின்றனர். தனியார் பஸ்களை தொடர்ந்து வரும் அரசு பஸ்களில் ஏற
இவர்கள் விரும்புவதில்லை. இதனால், தனியார் பஸ் படிக்கட்டுகளில் காலை, மாலை
நேரங்களில் மாணவர்கள் பலர் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணிப்பது,
வாடிக்கையான காட்சியாகி விட்டது. சமீபகாலமாக, மாணவர்களுக்கு இணையாக
மாணவியரும் படிக்கட்டு பயணத்தை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.
எதிர்பாராவிதமாக 'சடன் பிரேக்' அடித்தால், படிக்கட்டில் பயணிப்போர் நிலை,
அந்தோ பரிதாபம்தான். குறிப்பாக, முன்பக்க படிக்கட்டில் பயணிப்போர், இத்தகைய
நேரத்தில் கீழே விழுந்தால், கண்டிப்பாக பின் புற சக்கரத்தில்
மாட்டிக்கொள்வர்; அதேபோல, பின்புற படிக்கட்டில் பயணிப்போர், பின் தொடர்ந்து
வரும் வாகனத்தில் சிக்குவர். இந்த ஆபத்தினை நன்கு உணர்ந்திருந்தாலும்,
படிக்கட்டு பயணிகள் குறைவதாக இல்லை; போலீசாரும் இதைத் தடுப்பதாகத்
தெரியவில்லை. குறுகலான ரோடுகளில், அதிகமான வாகனங்கள் செல்ல வேண்டிய இந்த
கால கட்டத்தில், படிக்கட்டுகளில் பயணம் செய்வோரால், பிற வாகனங்களில்
செல்வோரும் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. கோவையிலிருந்து பழநிக்கு
செல்லும், தனியார் பஸ்சில், கல்லூரி செல்லும் மாணவர்கள் முன் மற்றும்
பின்புற படிக்கட்டுகளில் அதிகளவில் தொங்கியவாறு பயணித்தனர். சுந்தராபுரத்தை
அடுத்த காந்தி நகரை தாண்டிச் செல்லும்போது, டிரைவர் பஸ்சினை வேகமாகத்
திருப்பியுள்ளார்.அப்போது, அவ்வழியே பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரின் மீது, படிக்கட்டில்
பயணித்த மாணவர் ஒருவரின் 'பேக்' இடித்தது; பஸ்சின் பீடிங்கில் பட்டு, கீழே
விழுந்தார்; காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இதேபோல, இந்த
வழித்தடத்தில், சமீபகாலமாக பல விபத்துக்கள் நடந்துள்ளதாக பஸ் பயணிகள்
தெரிவிக்கின்றனர். படிக்கட்டில் பயணிப்போரை பிடித்து, அபராதம்
விதிக்கப்படும் என, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சிவனாண்டி
அறிவித்தார்; சில மாதங்கள் படிக்கட்டு பயணம் குறைந்தது. அவரையடுத்து வந்த
கமிஷனர்கள், இதில் அக்கறை காட்டவில்லை. படிக்கட்டு பயணத்தால் ஏற்படும்
விபத்துக்களைத் தடுக்க காவல்துறை, தனி கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்.