உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்., இல்லாததால் எந்த பாதிப்புமில்லை! தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை

காங்., இல்லாததால் எந்த பாதிப்புமில்லை! தி.மு.க., வேட்பாளர் நம்பிக்கை

கோவை : பைந்தமிழ், வீரகோபால் உள்ளிட்ட பலரும் வழக்கு, சிறை என்று 'பிஸி'யாகி விட, போட்டியே இல்லாமல் கட்சித்தலைமையால், கோவை மேயர் தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கார்த்திக் (45); துணை மேயராக அனுபவம் பெற்றவர்; களப்பணியில் கரை கண்டவர் என பல விதமான அடையாளங்களுடன் போட்டியிடுகிறார். 'மாஜி' அமைச்சர்கள் கண்ணப்பன், பழனிச்சாமி, மாநகர் மாவட்டச் செயலாளர் வீரகோபால், மூத்த தலைவர் ராமநாதன் சகிதமாக வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, வெளியே வந்தவரை கேள்விகளால் மடக்கினோம்.* காங்., இல்லாமல் தேர்தலைச் சந்திக்கிறீர்கள்; என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்? இது எங்களது கட்சித் தலைவரின் முடிவு; உள்ளாட்சித் தேர்தல் என்பது மக்களின் அடிப்படை வசதிகள் சம்மந்தப்பட்டது என்பதால், நாங்களே நேரடியாக தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். *காங்., இல்லாததால் ஏதாவது பாதிப்பு இருக்குமா? நிச்சயமாக பாதிப்பு இருக்காது; எங்களுடைய தனித்தன்மையை இந்தத் தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம். *பல்வேறு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால் ஆளும்கட்சிக்கு சாதகமாகி விடாதா? வாய்ப்பே இல்லை. கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சிகளின் மூலமாக நடந்துள்ள வளர்ச்சிப் பணிகள் ஏராளம். முப்பது ஆண்டுகளாக, அங்கீகரிக்கப்படாமலிருந்த லே-அவுட்களை வரன்முறைப்படுத்தி, பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் அவற்றில் ஏராளமான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அதனை மக்கள் மறந்து விட மாட்டார்கள்.கோவை மாநகராட்சியில் 600க்கும் மேற்பட்ட லே-அவுட்களில் தார்ச்சாலை, கால்வாய், குடிநீர் வசதி என எக்கச்சக்கமான வசதிகள் செய்து தரப்பட்டன. இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு, கடந்த ஐந்தாண்டுகளில்தான் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால், பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டன.பல காரணங்களால் இந்த பணிகள் தாமதமாகின்றன. நான் மேயரானால், சமூக அமைப்புகளையும் ஆலோசித்து, கண்காணிப்புக் குழுவை அமைத்து, இந்தப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க நடவடிக்கை எடுப்பேன். ஒரே மாதத்தில், கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில்உள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவேன்.கோவையை தூய்மையான, பசுமையான நகரமாக மாற்றுவதே என்னுடைய முதல் நோக்கம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நகரில் 5 இடங்களில் சுரங்க நடைபாதை அமைப்பேன். விரிவாக்கப் பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன். *இந்த பணிகளுக்கெல்லாம் அங் கீகாரம் கொடுப்பதாக இருந்தால், சட்டசபைத் தேர்தலிலேயே கோவை மாநகராட்சிப் பகுதியில் தி.மு.க., வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, கட்சிக்காக இல்லாமல் கட்சி வேட்பாளருக்காகத்தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள். இவரைப் பார்க்க முடியுமா, இவரைக் கூப்பிட்டால் வேலை நடக்குமா என்றுதான் பார்ப்பார்கள். அந்த வகையில், பொது மக்களின் பல விதமான பிரச்னைகளைத் தீர்த்து வைத்துள்ள தி.மு.க.,வினரைத்தான் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள். *எவ்வளவு ஓட்டுக்கள் வாங்குவீர்கள்...?லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் கண்டிப்பாக ஜெயிப்பேன். கைகளை கம்பீரமாக உயர்த்திக் காட்டுகிறார் கார்த்திக்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை