| ADDED : டிச 13, 2025 07:52 AM
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளவர்களை, சொக்கனூர் ஊராட்சியில் இணைக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். தமிழகத்தில் உள்ள 17 பெரிய கிராம ஊராட்சிகளை, 37 ஊராட்சிகளாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதில், பொள்ளாச்சி புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகுதி, சொக்கனூர் ஊராட்சியில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு இல்லாததால், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'கிணத்துக்கடவு ஒன்றியம், முத்துக்கவுண்டனூர் கிராமத்தின் வடக்கு பகுதி சொக்கனூர் ஊராட்சியிலும், தெற்கு பகுதி புரவிபாளையம் ஊராட்சியில் உள்ளது. ஒரே கிராமம் இரு ஊராட்சியில் இருப்பதால், ஒவ்வொரு விஷயத்துக்கும் மக்கள் அலைமோத வேண்டியுள்ளது. எனவே, தெற்கு பகுதியை சொக்கனூர் ஊராட்சியில் இணைக்க வேண்டும்,' என்றனர். ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'முத்துக்கவுண்டனூர் தெற்கு பகுதியில் உள்ளவர்களை சொக்கனூர் ஊராட்சியில் இணைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் சொக்கனூர் ஊராட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.