மேட்டுப்பாளையம்: காரமடை ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தி.மு.க., தலைவராக உள்ள ஊராட்சிகளுக்கு இரண்டு வீடுகளும், அ.தி.மு.க., தலைவராக உள்ள ஊராட்சிகளுக்கு 80 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.காரமடை ஒன்றியத்தில் சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, இலுப்பநத்தம், இரும்பறை உள்ளிட்ட 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் சின்னக்கள்ளிப்பட்டி, பெள்ளேபாளையம், ஓடந்துறை, தோலம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்கள் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.ஜடையம்பாளையம் ஊராட்சியில் சுயேட்சையும், மருதூரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், தலைவர்களாக உள்ளனர். காரமடை ஒன்றியத்தில் மீதமுள்ள, 11 ஊராட்சிகளில் அ.தி.மு.க.,வினர் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இலவச வீடுகள்
கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் ஏதும் கட்டிக் கொடுக்கவில்லை. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும், நடந்த கிராம சபை கூட்டங்களில், 200க்கும் மேற்பட்டவர்கள், இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கும்படி ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் கூரை மற்றும் தகர சீட் போட்ட வீடுகளையும், வீடு இல்லாதவர்களையும் கணக்கெடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஊராட்சி தலைவர்கள், கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் வழங்கிய, இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு மொத்தமாக, 90 கனவு இல்ல வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தி.மு.க., ஊராட்சி தலைவர்களாக உள்ள சின்னக்கள்ளிப்பட்டி, தோலம்பாளையம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு ஒரு வீடும் ஒதுக்கவில்லை. ஓடந்துறை, பெள்ளேபாளையம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு, தலா ஒரு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 90 வீடுகள்
அ.தி.மு.க., தலைவராக உள்ள நெல்லித்துறை, சிக்காரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஒரு வீடும் ஒதுக்கவில்லை. தேக்கம்பட்டி சிக்கதாசம்பாளையம், முடுதுறை ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ஒரு வீடும், மருதூர் ஊராட்சிக்கு இரண்டு வீடும், கெம்மாரம்பாளையத்துக்கு நான்கு வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜடையம்பாளையம், வெள்ளியங்காடு, இரும்பறை ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ஆறு வீடுகளும், காளம்பாளையத்துக்கு எட்டு வீடுகளும், இலுப்பநத்தம் ஊராட்சிக்கு, 16 வீடுகளும், பெள்ளாதி ஊராட்சிக்கு, 37 வீடுகள் என, மொத்தம், 90 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, தி.மு.க., ஊராட்சி தலைவர்கள் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:கலைஞர் கனவு இல்ல வீடுகள், தி.மு.க., தலைவராக உள்ள இரண்டு ஊராட்சிகளுக்கு ஒரு வீடும் ஒதுக்கவில்லை. இரண்டு ஊராட்சிகளுக்கு தலா ஒரு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க., தலைவர்கள் உள்ள ஊராட்சிகளுக்கு, 4,6,8,16 வீடுகளும், அதிகபட்சமாக பெள்ளாதி ஊராட்சிக்கு, 37 வீடுகளை, அதிகாரிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ள, 90 வீடுகளையும், 17 ஊராட்சிகளுக்கு சமமாக பகிர்ந்து அளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், பாரபட்சமான முறையில், வீடுகள் ஒதுக்கீடு செய்திருப்பது, தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் உள்பட மேலும் சில ஊராட்சி தலைவர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும், பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை, ஊராட்சி தலைவர்கள், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கொடுத்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் மனுக்களை முறையாக பரிசீலனை செய்யவில்லை. மேலும் தோலம்பாளையம் ஊராட்சி, மலைவாழ் மக்கள் அதிக வசிக்கும் பகுதியாகும். இப்பகுதிகளில் ஏராளமானவர்கள் வீடு இல்லாமல் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு ஒரு வீடும் ஒதுக்கவில்லை. எனவே அனைத்து ஊராட்சி மக்களும் பயன்பெறும் வகையில், சமமாக வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, தி.மு.க., ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.