உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனைமலை ரோட்டிலுள்ள மரங்களின் குரல் கேட்குதா எங்களை காப்பற்றுங்க! தன்னார்வலர்கள் களமிறங்கியதால் அனுமதி நிராகரிப்பு

ஆனைமலை ரோட்டிலுள்ள மரங்களின் குரல் கேட்குதா எங்களை காப்பற்றுங்க! தன்னார்வலர்கள் களமிறங்கியதால் அனுமதி நிராகரிப்பு

ஆனைமலை:பொள்ளாச்சி - ஆனைமலை ரோட்டில் பசுமையான, 27 மரங்களை வெட்டி ரோடு விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு, இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அனுமதி வழங்கவில்லை என, சப் - கலெக்டர் அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், தாத்துார் பிரிவில் கூடிய ஆர்வலர்கள், இனி மரங்களை வெட்டும் எண்ணத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு, பசுமையான மரங்கள் சூழந்த பகுதியாகும். பலவகை மரங்கள் நிறைந்த இடம், 'சினிமா பட ஷூட்டிங்'க்கு பெயர் பெற்றது. ஆனைமலைக்கு வருவோரை வரவேற்கும் வகையில் அமைந்துள்ள மரங்கள், இயற்கையின் பொக்கிஷமாக உள்ளன.எப்போதும், பறவைகள் ரீங்காரமிடும் இப்பகுதி, பறவைகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இந்த ரோடே ஆனைமலையின் அடையாளமாக உள்ளது. இந்நிலையில், இந்த ரோட்டில் தாத்துார் பிரிவு அருகே ரோடு விரிவாக்கப்பணிக்காக, 27 மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் பரவியது.இதையடுத்து, இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் பலரும், எதிர்ப்பு குரல் கொடுத்ததோடு, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.தாத்துார் பிரிவு அருகே இயற்கை ஆர்வலர்கள் போராட்டத்துக்காக கூடுவதாக தகவல் பரவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மரங்கள் வெட்டப்படாது என அறிவிப்பு வெளியானது.

வெட்ட அனுமதியில்லை

சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா அறிக்கை:ஆனைமலை அருகே, சுப்பேகவுண்டன்புதுார் ஊராட்சி அருகே அம்பராம்பாளையம் முதல் சேத்துமடை வரை உள்ள ரோட்டில், தாத்துார் பிரிவு அருகே நெடுஞ்சாலைத்துறையால், ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணி மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.இப்பணிக்கு இடையூறாக உள்ள, 27 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறையினரால் வருவாய்துறையினரிடம் அனுமதி கோரி முன்மொழிவுகள் வரப்பெற்றது. வருவாய்துறையால் புலத்தணிக்கை செய்து பரிசீலனை செய்ததில், அம்பராம்பாளையம் முதல் சேத்துமடை வரை உள்ள சாலை தற்போது வாகன போக்குவரத்துக்கு போதுமானதாக உள்ளது.இப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படும் போது, இயற்கை பாதிப்புகளான மழைப்பொழிவின்மை; மண் அரிப்பு மற்றும் இயற்கை அழகு சீர்கெடும். எனவே, நெடுஞ்சாலைத்துறையினரால், சந்திப்பு மேம்பாட்டு பணிக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய முன்மொழிவுகள் நிராகரிப்பட்டுள்ளது.மேலும், மரங்கள் வெட்டப்படும் நிகழ்வு தொடர்பான எவ்வித வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாத்துார் பிரிவு அருகே, நேற்று ஆலம் விழுது அமைப்பினர், தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்பினர், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என, 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

நாங்க இருக்கோம்!

அவர்கள் கூறியதாவது:ஆனைமலை ரோட்டின் அழகை காண, இந்த பகுதிக்கு பலரும் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலாப்பயணியர் வருவதே, இந்த அழகான சாலையில் பயணிக்கத்தான். எதை காண வருகிறாரோ அதையே சீர்குலைக்க நினைப்பது வேதனையானது.போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை இல்லை. சாலை விரிவாக்கம், விபத்துகளை தடுக்க என காரணங்களை கூறி மரங்களை மட்டுமே வெட்டி சாய்க்கின்றனர். ஏற்கனவே, பழைய நிலை மாறி பொள்ளாச்சியில் அதிக வெப்பம் நிலவுகிறது.ஒவ்வொரு பகுதியாக மரங்களை வெட்டிக்கொண்டே போனால், மழைப்பொழிவு இல்லாமல் வறண்ட பகுதியாக மாறிவிடும்.வருங்கால சந்ததிகளுக்கு பசுமையான உலகை கொடுக்க நாம் முன்வர வேண்டும்.இனி மரங்களை வெட்டும் எண்ணத்தை நெடுஞ்சாலைத்துறையினர் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இங்குள்ள மரங்கள் வெட்டாமல் பாதுகாக்கும் வரை, எங்களது கண்காணிப்பும் தொடரும்.இவ்வாறு, கூறினர்.

மரம் காக்க 'செல்பி' பாயின்ட்!

ஆனைமலை ரோட்டில், தாத்துார் பிரிவு அருகே, 'என்னை வெட்டாதீர்கள்' என, 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டு இருந்தது. அதில், அங்கு வந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் அனைவரும் நின்று, 'செல்பி' எடுத்தனர்.மரங்களை காப்போம்; மழை பெறுவோம். எங்கே மரங்களை வெட்டினாலும், அங்கு குரல் கொடுப்போம். தற்போது மரங்களை வெட்ட அனுமதியில்லை என, அதிகாரிகள் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனாலும், இனிமேல் மரம் வெட்டும் வகையில் திட்டமிடக்கூடாது. மரங்கள் வளர்க்க திட்டமிட வேண்டும், என கருத்துக்களை பகிர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை