உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெற்றோரை அழைத்து செல்ல நிதி ஒதுக்கல! பள்ளி தலைமையாசிரியர்கள் அதிருப்தி

பெற்றோரை அழைத்து செல்ல நிதி ஒதுக்கல! பள்ளி தலைமையாசிரியர்கள் அதிருப்தி

பொள்ளாச்சி;'பெற்றோரை கொண்டாடுவோம்' நிகழ்ச்சிக்கு, பெற்றோர்களை அழைத்துச் செல்ல நிதி ஒதுக்கீடு செய்யாததால், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மாணவர்களின் பெற்றோரை பாராட்டும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில், ஏழு மண்டலங்களாகப் பிரித்து, நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.கோவை மண்டலத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.அதன்படி, கோவை கொடிசியா அரங்கில் இன்று (23ம் தேதி) 'பெற்றோரை கொண்டாடுவோம், நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதற்காக, மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளியில் இருந்தும், குறைந்தபட்சம் 3 மாணவர்களின் பெற்றோர், இரு ஆசிரியர்கள் என, 5 பேர் பங்கேற்க வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இவர்களை அழைத்துச் செல்வதற்காக, ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும், தனியார் பள்ளி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், கோவையில் காலை, 9:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது.அந்நேரத்திற்குள், மாவட்டத்தின் கடைகோடி அரசு பள்ளிகளில் இருந்தும், பெற்றோரை அழைத்துச் செல்வது தலைமையாசிரியர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.காலை நேர சிற்றுண்டிக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாமல், பெற்றோர்களை அழைத்து செல்ல உத்தரவிட்டிருப்பது, தலைமையாசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அடுத்த வாரம் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 'பெற்றோரை கொண்டாடுவோம்' நிகழ்ச்சிக்கு, மாணவர்களின் பெற்றோர்களை ஆசிரியர்கள் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.மாவட்டங்களின் கடைக்கோடி அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்களின் பெற்றோர்கள், இத்தகைய விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டுவது கிடையாது. பெற்றோரின் வருகையை உறுதிபடுத்துவதே சிரமமாக உள்ளது.ஏற்கனவே, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த விபரம், 'கூகுள் சீட்' வாயிலாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை தேர்வு செய்து, அவர்களை மட்டும் அழைத்து பாராட்டலாம். எவ்விதி நிதி ஒதுக்கீடு செய்யாமல், பெற்றோரை அழைத்துச் செல்ல நிர்பந்தம் செய்வது ஏற்புடையதல்ல.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை