உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வனத்துறையினரை விரட்டிய யானைகள்; அக்காமலையில் நள்ளிரவில் திக்திக்

 வனத்துறையினரை விரட்டிய யானைகள்; அக்காமலையில் நள்ளிரவில் திக்திக்

வால்பாறை: தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்திய யானைகளை விரட்ட முயன்ற வனத் துறையினரை, யானைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, அக்காமலை, அய்யர்பாடி, புதுத்தோட்டம், செங்குத்துப்பாறை, சவராங்காடு உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், அக்காமலை எஸ்டேட் பகுதியில் நள்ளிரவில்முகாமிட்டநான்கு யானைகள், சூடக்காட்டுபாடி தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, கோவிந்தன், சரோஜா ஆகியோரின் வீடுகளை இடித்து சேதப்படுத்தின. சப்தம் கேட்டு எட்டி பார்த்த தொழிலாளர்கள், வாசலில் யானைகள் நிற்பதை கண்டு பின் பக்க வாசல் வழியாக வெளியேறி அருகில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனர். தகவல் அறிந்த மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று, யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், வனத்துறையினரை யானைகள் விரட்ட துவங்கியதால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மூன்று மணி நேரத்துக்கு பின் வனத்துறையினர் எஸ்டேட் தொழிலாளர்களுடன் இணைந்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் முகாமிட்டதால் அக்காமலை எஸ்டேட் தொழிலாளர்கள் துாங்க முடியாமல் பரிதவித்தனர். பழுதான வாகனம் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளை விரட்டும் பணிக்காக மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் தனியாக செயல்படுகின்றனர். நான்கு வாகனங்கள் பயன்பாட்டுக்கு உள்ள நிலையில், தற்போது இரண்டு வாகனங்கள் பழுதடைந்துள்ளதால், யானைகள் முகாமிடும் பகுதிக்கு விரைந்து செல்ல முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். பழுதடைந்த இரண்டு வாகனங்கள் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த வாகனங்களை சரி செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை