ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம்
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.காரமடை அரங்கநாதர் கோவிலில், தினமும் நூற்றுக்கான பக்தர்கள் வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில், இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலை சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகள் அதிகம் காணப்பட்டன. இது தொடர்பாக காரமடை நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையடுத்து, காரமடை நகராட்சி கமிஷனர் மதுமிதா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிரடியாக கோவிலை சுற்றி சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். இது தொடர்பாக, 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் கடைகளின் முன் பகுதிகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. காரமடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.--