உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.75 லட்சம் மதிப்பிலான 3 டன் ஜாதிபத்ரி; பொள்ளாச்சியில் இருந்து ஏற்றுமதி

ரூ.75 லட்சம் மதிப்பிலான 3 டன் ஜாதிபத்ரி; பொள்ளாச்சியில் இருந்து ஏற்றுமதி

பொள்ளாச்சி;'ஆனைமலை அருகே, கோட்டூரில் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மூன்று டன் ஜாதிபத்ரி கேரளா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,' என, ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை, கோட்டூர் மற்றும் தமிழக எல்லையோர கிராமங்களில், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.அண்டை மாநிலத்தை விட, ஆனைமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் ஜாதிக்காய், ஜாதிபத்ரி உயர்தரமாக உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் போட்டி போட்டு நல்ல விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.ஆண்டுதோறும், ஜூன் மாதம் முதல் நவ., மாதம் வரை அறுவடை நேரம் என்பதால், ஜாதிக்காய் அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.விவசாயிகள் ஒன்றாக இணைந்து, பொள்ளாச்சி ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாயிலாக கடந்தாண்டு செப்., மாதம், 31 டன் முதல் தரமான ஜாதிக்காய் விற்பனை செய்தனர்.கடந்தாண்டு அக்., மாதம் இரண்டாம் தரமான ஜாதிக்காய் மற்றும் ஜாதிப்பத்ரி ஏழு தரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளூரில் விற்பனை செய்யப்பட்டன. தொடர்ந்து முதல் தரம் வாய்ந்த ஜாதிபத்ரியை கேரளா மாநிலம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவன மேலாண்மை இயக்குனர் ரஞ்சித்குமார் கூறியதாவது:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், 500 ஏக்கரில் ஜாதிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது, தரம் பிரிக்கப்பட்டு, கேரளா மாநிலம் கொச்சிக்கு கொண்டு சென்று அங்கு இருந்து, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது, கேரளா மாநிலத்துக்கு, பொள்ளாச்சி ரகம் ஒரு கிலோ, 2,580 ரூபாய்க்கும், கேரளா ரகம், 2,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மொத்தம், 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று டன் ஜாதிபத்ரி கேரளா மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது.அங்கு இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஜாதிபத்ரி பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.நிறுவன பொருளாளர் விஸ்வநாதன் கூறுகையில், ''ஜாதிக்காய் உற்பத்தி செய்யும், 100 விவசாயிகள் சேர்ந்து உற்பத்தி நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. ஜாதிக்காய் போன்று ஜாதிபத்ரிக்கும் நல்ல விலை கிடைத்துள்ளது.கேரள ரகத்தை விட, பொள்ளாச்சி ரகம் தரமாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. பருவ நிலை மாற்றம் காரணமாக இந்தாண்டுமூன்று டன் மட்டுமே அனுப்பப்படுகிறது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்