மேட்டுப்பாளையம்;பழப்பாக்கு சராசரி ஒரு கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பாக்கின் விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில், பாக்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கல்லாறு, நெல்லித்துறை, குத்தாரிபாளையம் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் அதிக அளவில் பாக்கு விவசாயம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மழை ஓரளவு பெய்ததால், பாக்கு விளைச்சல் நன்றாக உள்ளது. தற்போது தோப்புகளில் நன்கு பழுத்த பழப்பாக்கு அறுவடை நடைபெறுகின்றன. பாக்கு மரத்தில் இருந்து அறுத்தல், அதை குழையிலிருந்து தனியாக பிரித்தல், காய வைத்தல், தரம் பிரித்தல் ஆகிய பணிகளில், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவசாயி மாதையன் கூறியதாவது: மங்களா ரக பாக்கு அதிகளவில் பயிர் செய்துள்ளனர். நன்கு தண்ணீர் பாய்ச்சி, இயற்கை உரம் வைத்தால், ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு, 50 லிருந்து,100 கிலோ பாக்குகள் கிடைக்கும். செப்டம்பர் மாதம் துவங்கும் பாக்கு அறுவடை, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். தற்போது பாக்கு அறுவடை நடைபெறுகிறது. ஒரு கிலோ பச்சை பாக்கு, 50 லிருந்து, 53 ரூபாய் வரையும், பழுத்த பழப்பாக்கு ஒரு கிலோ, 60 லிருந்து, 62 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. நன்கு காய்ந்த விதை பாக்கு ஒரு கிலோ, 100 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. தற்போது பாக்கு விலை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு விவசாயி கூறினார். இது குறித்து பாக்கு வியாபாரிகள் கூறுகையில், ''மேட்டுப்பாளையத்தில் விளையும் பாக்குகள் வட மாநிலங்களுக்கும், தரம் பிரித்து முதல் தரமான பாக்குகளை வெளிநாடுகளுக்கும் அனுப் பப் படுகிறது. பாக்கு தோலை உரித்து, காய வைத்து கொட்டை பாக்காக மாற்றி விற்பனை செய்யும் போது, ஒரு கிலோ, 325 லிருந்து, 350 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் பாக்கு விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றனர்.