| ADDED : டிச 25, 2025 05:21 AM
அன்னூர்: மன்னீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடக்கிறது. அன்னூரில் உள்ள, 1,000 ஆண்டுகள் பழமையான, மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் மன்னீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவில் நேற்று காலை சின்னம்மன் மற்றும் பெரிய அம்மன் கோயிலில் கிராம தேவதை வழிபாடு நடந்தது. மாலையில் மன்னீஸ்வரர் கோயிலில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமமும், 8:00 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. 9:30 மணிக்கு கயிலை வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் யமுனா தலைமை வகித்தார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன், கோயில் செயல் அலுவலர் சிவசங்கரி, தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், மின்வாரிய உதவி பொறியாளர் பவித்ரா, பேரூராட்சி துப்புரவு அலுவலர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.