மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், காரமடை ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக 6 பிளாட்பாரங்கள் கட்ட, மத்திய அரசு, 28.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேட்டுப்பாளையத்தில், ரயில்வே ஸ்டேஷன் கட்டி, 150 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஊட்டி மலை ரயிலை, யுனஸ்கோ அமைப்பு பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு ஒரு முறை மட்டுமே மலை ரயில் இயக்கப்படுகிறது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், கோவைக்கு பாசஞ்சர் ரயிலும், திருநெல்வேலிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது. ரூ. 28 கோடி ஒதுக்கீடு
மத்திய அரசு, அம்ரித் திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் தரத்தை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், 14.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது ரயில்வே ஸ்டேஷனில், கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், பயணிகள் நிழல் கூடங்கள், எஸ்கலேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம் நகர மக்கள் பல ஆண்டுகளாக, ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரங்களையும், ரயில் பாதைகளையும் அதிகப்படுத்தி, கோவையிலிருந்து இயக்கப்படும், அனைத்து ரயில்களையும், மேட்டுப்பாளையத்தில் இருந்து, இயக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு, மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, 18.38 கோடி ரூபாயும், காரமடை ரயில்வே ஸ்டேஷனுக்கு, 9.79 கோடி ரூபாயும் என, மொத்தமாக, 28.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கூடுதல் பிளாட்பாரங்கள்
மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் தற்போது, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின், 24 பெட்டிகள் நிறுத்தக்கூடிய பெரிய பிளாட்பாரம் ஒன்று உள்ளது. கோவை பாசஞ்சர் ரயிலின், 10 பெட்டிகள் நிறுத்தவும், ஊட்டி மலை ரயில் நான்கு பெட்டிகள் நிறுத்தவும் என, இரண்டு சிறிய பிளாட்பாரங்கள் உள்ளன. மத்திய அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து, மேலும் கூடுதலாக பிளாட்பாரங்கள் கட்ட, ரயில்வே நிர்வாகம், நடவடிக்கை எடுக்க உள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் தற்போது, 24 பெட்டிகள் நிறுத்துவதற்கு வசதியாக ஒரு பிளாட்பாரமும், ஊட்டி ரயில், பாசஞ்சர் ரயில் நிறுத்த, இரண்டு சிறிய பிளாட்பாரங்களும் உள்ளன.மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில், 24 பெட்டிகள் நிறுத்தக் கூடிய இரண்டு புதிய பிளாட்பாரங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் ஊட்டி மலை ரயில் நிறுத்த, புதிய ரயில் பாதையும், புதிதாக பிளாட்பாரமும் அமைக்கப்பட உள்ளது. காரமடையில் தற்போது, 12 பெட்டிகள் நிறுத்துவதற்கு வசதியாக பிளாட்பாரம் உள்ளது. அங்கும், 24 பெட்டிகள் நிறுத்துவதற்கு வசதியாக, தற்போதைய பிளாட்பாரத்தை விரிவு படுத்தியும், மேலும் புதிதாக ஒரு பிளாட்பாரம் கட்டப்பட உள்ளது, என்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வாய்ப்பு
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் நான்கு பெரிய பிளாட்பாரங்கள், தண்ணீர் வசதி ஆகியவை செய்யப்படும் என்பதால், கோவையில் இருந்து இயக்கப்படும் ரயில்களை, மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.