50 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளி... அசைபோட்ட முன்னாள் மாணவர்கள்
கோவை; கோவை, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப்பள்ளியில் நேற்று, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 1975ம் ஆண்டு படித்த 15க்கு மேற்பட்டவர்கள், பங்கேற்று பள்ளி நாட்களை அசைபோட்டு மகிழ்ந்தனர். ஜி.கே.என்.எம். அறக்கட்டளை முதன்மை கல்வி அதிகாரி சத்திய நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அன்றைய கணித ஆசிரியர் லோகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. வகுப்பறைகளில் அமர்ந்து தங்கள் மாணவர் பருவக் காலத்தை மீண்டும் நினைவுகூர்ந்த அவர்கள், 'படித்த வகுப்பறைகள், அமர்ந்த மேஜைகள், விளையாடிய மைதானங்கள் ஆகியவற்றை கண்டதும் மனம் துள்ளுகிறது. அன்றைய பள்ளி நாட்கள் மீண்டும் கண்முன் வந்து விட்டன. அப்போது தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், வகுப்பில் உடன் படித்த பெண்களுடன் கூட உரையாட முடியவில்லை; அவ்வளவு பயம், கட்டுபாடுகள் இருந்தன. ஆனால், இப்போது மாணவர்களும் மாணவிகளும் சரளமாக உரையாட முடிகிறது' என்றனர்.