உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்; கோயில்களில் மக்கள் பக்தி பரவசம்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்; கோயில்களில் மக்கள் பக்தி பரவசம்

கோவை; விநாயகர் சதுர்த்தியான நேற்று, கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவை புலியகுளத்தில் உள்ள தெற்காசியாவிலேயே அதிக உயரம் கொண்ட விநாயகப் பெருமானுக்கு, அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. சுவாமிக்கு சகல திரவிய அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவை - பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி விநாயகர் கோவிலில், அதிகாலை திருப்பள்ளி எழுச்சியோடு, சிறப்பு வழிபாடு நடந்தது. கணபதி ஹோமம், 16 வகையான திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார். கோவையில் உள்ள பிற விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு, விநாயகர் அகவல் பாராயணம் நடந்தது. பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் நைவேத்தியங்களை படைத்து பூஜை செய்தனர். இந்து முன்னணி சார்பில், கோவை மேட்டுப்பாளையம் சாலை தெப்பக்குளம் மைதானத்தில் பாலவிநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகளிருக்கான கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், திருவிளக்கு வழிபாடு, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இ.ம.க., சார்பில் ராஜவீதி தேர்நிலைத்திடலில், ராஜகணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது, கணபதி ஹோமம், பக்தி இன்னிசை, பரதநாட்டியம், குழந்தைகளுக்கான ஆன்மிக வினாடிவினா, பாட்டு போட்டி நடந்தது. பொது நல அமைப்புகள், சமூக அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள், நண்பர்கள் குழு சார்பிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை