ரோட்டில் அத்துமீறல்
பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட குஞ்சிபாளையத்தில், குடியிருப்பு பகுதியில் உள்ள கான்கிரீட் ரோட்டில், வீட்டின் முன்பாக திட்டு போன்று 'ரேம்ப்' அமைத்துள்ளனர். இதனால், வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. 'ரேம்ப்' அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செந்தில்குமார், குஞ்சிபாளையம். வாகனங்கள் ஆக்கிரமிப்பு
வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவில் ரோட்டில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தங்கவேலு, வால்பாறை. பஸ் ஸ்டாப்பில் இடையூறு
பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி தாராபுரம் ரோடு பஸ் ஸ்டாப்பில், ரோட்டோரத்தை ஆக்கிரமித்து, கடைகள் மற்றும் பிளக்ஸ் வைத்துள்ளனர். பயணியருக்கு பஸ்கள் வருவதே தெரிவதில்லை. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- தமயந்தி, ஊஞ்சவேலாம்பட்டி. குப்பை அகற்றுங்க!
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதி பள்ளி அருகில், குப்பை குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுச்சுகாதாரம் பாதிக்கிறது. தினமும் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விஜய் செந்தில்பிரபு, பாலகோபாலபுரம் வீதி. 'சிலாப்' அமைக்கணும்!
பொள்ளாச்சி, பல்லடம் ரோடு குமரன் வீதியில் சாக்கடை வடிகால் மூடப்படாமல் உள்ளதால், பெருச்சாலிகள் வீட்டினுள் புகுந்து விடுகின்றன. வடிகாலுக்கு சிலாப் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.- கார்த்தி, பல்லடம் ரோடு. தெருநாய் தொல்லை
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு, மகாலிங்கபுரம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றுகின்றன. மக்களையும், வாகனங்களில் செல்வோரையும் தெருநாய்கள் விரட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிருஷ்ணன், பொள்ளாச்சி. பள்ளி மாணவியர் அவதி
கோட்டூர் ரோடு, பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. அங்கு பஸ் வருகைக்காக காத்திருக்கும் மக்களும், பள்ளி மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றி, அப்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும்.- சுப்ரமணி, கோட்டூர் ரோடு. விபத்து அபாயம்
குமரன் நகர், பள்ளிவாசல் அருகே வளைவில் இடது பக்கம் திரும்பும் போது, சிறு பாலம் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். பாலத்துக்கு ஏற்ப ரோட்டை உயர்த்த வேண்டும்.- முகமது யூசுப், குமரன் நகர். குழாயில் திருகு இல்லை
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், குடிநீர் குழாயில் திருகு அமைக்கப்படாததால், வெளியேறும் தண்ணீர் தொட்டியில் தேங்கியுள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. குடிநீரும் வீணாகிறது. இதை ரயில்வே நிர்வாகத்தினர் சரிசெய்ய வேண்டும்.- கில்பர்ட், உடுமலை. மண் குவியல்
உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. அப்போது தோண்டப்பட்ட குழியிலிருந்து எடுக்கப்பட்ட மண் அங்கேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இந்த மண் குவியலை அகற்ற வேண்டும்.- செல்வம், உடுமலை. சுகாதாரம் இல்லை
உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் ரேஷன் கடை, வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை பொதுமக்கள் திறந்த வெளிக்கழிப்பிடமாக மாற்றிவிட்டதால், மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.- மகேந்திரன், உடுமலை. வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, சத்திரம் வீதியில் சரக்கு வாகனங்கள் ரோட்டில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆக்கிரமித்து நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தினேஷ், உடுமலை. குப்பையை அகற்றணும்
உடுமலை, மூனிர் காம்பளக்ஸ் பகுதியில் குப்பைக்கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் குவியலாக இருப்பதால், மழைநீர் அதில் தேங்கி மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.- ரங்கநாதன், உடுமலை. சேதமடைந்த ரோடு
உடுமலை, பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், ரோடு மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால், மழைநீர் தேங்கி அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் மாலை நேரங்களில் அடிக்கடி வாகன ஓட்டுநர்களும் விபத்துக்குள்ளாகின்றனர்.- மாதவன், பெரியகோட்டை. விரைந்து முடிக்கணும்
தேசிய நெடுஞ்சாலை - ஸ்ரீநகர் சந்திப்பில் தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பணிகள் முடிவடையாமல் மந்த கதியில் நடந்து வருகிறது. இதனால், அதை வாகனங்கள் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, இப்பால பணிகளை நகராட்சியினரும், பொதுப்பணித்துறையினரும் விரைந்து முடிக்க வேண்டும்.- ராஜேஷ், உடுமலை.