குடும்பநல அறுவை சிகிச்சைக்கு ஆண்களும் வருவதால் மகிழ்ச்சி
கோவை; ஆண்களுக்கான குடும்பநல அறுவைச்சிகிச்சையில், விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதாக, குடும்பநலத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பநலத்துறையின் கீழ், ஆண்கள், பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.குடும்ப கட்டுப்பாடு அவசியம், ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு முகாம், கர்ப்பத்தடை பயன்பாடு, உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு 600 ரூபாயும், ஆண்களுக்கு கோவையில் 3100 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.பொதுவாக, பெண்களே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். ஆண்கள் முன்வருவதில்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு காரணமாக, கடந்த காலங்களை காட்டிலும், நடப்பாண்டில் சற்று அதிகமானோர், அறுவைசிகிச்சை செய்துகொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குனர் கவுரி கூறியதாவது: ஒரு குழந்தைக்கும், மற்றொரு குழந்தைக்கும் இடையில், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது இடைவெளி இருக்க வேண்டும். நிரந்தர கருத்தடை முறை பின்பற்றாதவர்கள்; கட்டாயம் தற்காலிக முறையையாவது கடைபிடிக்க வேண்டும். ஆண்களுக்கான அறுவைசிகிச்சை குறித்து, விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. 2024 ஏப்., முதல் 2025 மார்ச் இறுதிவரை, 11,206 பெண்களும், 35 ஆண்களும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.நடப்பாண்டில், 2025 ஏப்., முதல் ஜூன் வரை, 2,773 பெண்களும், 13 ஆண்களும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 2020ல் ஆண்டு, 10 ஆண்கள் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு முன்வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பெண்களுக்கு இணையாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இச்சிகிச்சை செய்து 24 மணி நேரத்தில் வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம். ஒரு வாரத்தில் எடை துாக்குதல், சைக்கிளிங் போன்ற அனைத்து பணிகளிலும் ஈடுபடலாம். இவ்வாறு, அவர் கூறினார்.