| ADDED : ஜன 13, 2024 01:23 AM
கோவை';கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்துக்கு பின்புறம் வாகனங்கள் நிறுத்துமிடம் இருக்கிறது. அப்பகுதியில், ஒரு தேநீர் கடை செயல்படுகிறது. மரங்கள் காணப்படுவதால், பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன.மயில் குஞ்சு ஒன்று தாயைப்பிரிந்து, அங்கும் மிங்கும் தவித்தது. பறக்க முடியாத நிலையில், தாவிக்குதித்து சென்று கொண்டிருந்தது. தேநீர் கடை ஊழியர் எடிசன்,23, மயில் குஞ்சை மீட்டு, ஒரு அட்டை பெட்டியில் பாதுகாத்ததோடு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அத்தருணத்தில், குஞ்சை தேடி, தாய் மயில் வந்தது. அதனுடன் குஞ்சை சேர்ப்பதற்காக, அதனருகே குஞ்சை, அந்த இளைஞர் விட்டார். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில், மயில் குஞ்சை, ஒரு பருந்து துாக்கிச் செல்ல முற்பட்டது.அதனுடன் தாய் மயில் சண்டை போட்டது. தாய் மயிலை பருந்து விரட்டத் துவங்கியதால், குஞ்சை மீண்டும் மீட்டு, வனத்துறை ஊழியர் வந்ததும், அவரிடம் ஒப்படைத்தார்.வனத்துறை ஊழியர் கூறுகையில், 'வடவள்ளியில் உள்ள பறவை வளர்க்கும் ஆர்வலர்களிடம் ஒப்படைத்து, ஆறு மாதம் வளர்கப்படும். பின், வனப்பகுதியில் விடப்படும்' என்றார்.