பொள்ளாச்சி;''பி.ஏ.பி., கால்வாய்களில் குப்பை கொட்டி ஆக்கிரமிப்பு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சப் - கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.பி.ஏ.பி., திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாய், கிளை கால்வாய், பகிர்மான கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.இதன் வாயிலாக, பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.ஆழியாறு அணையில் இருந்து, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், பி.ஏ.பி., திட்ட கால்வாய்களில் கழிவுகளை வீசுவது, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கலப்பதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.மேலும், கழிவுகளால், நீர் மாசுபடுவதுடன், நீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.இந்நிலையில், கால்வாய்களில் கழிவுகளை கொட்டினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என, சப் - கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா அறிக்கை:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள, நீர் நிலை புறம் போக்குகளில், குறிப்பாக பி.ஏ.பி., கால்வாய்களில் குப்பை கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து புகார்கள் வந்தன.இனிவரும் காலங்களில், நீர் நிலை புறம்போக்குகளிலோ அல்லது அரசு புறம்போக்கு இடங்களிலோ குப்பை கொட்டுவது கண்டறிந்தால், தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.