கடும் துர்நாற்றம்
கோவைப்புதுார், 90வது வார்டு, எம்.ஜி.ரோடு, பழைய போலீஸ் குடியிருப்பு அருகில், காலியிடத்தில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. இவற்றை நாய்கள் இழுத்து ரோட்டில் சிதறவிடுகின்றன. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.- பாலாஜி, கோவைப்புதுார். தொடரும் விபத்து
காரமடை, தோலம்பாளையம் ரோடு, ரயில்வே கேட் அருகில், மங்களக்கரை புதுார் செல்லும் வழியில், ஏராளமான கான்கிரீட் லாரிகள் செல்கின்றன. இவ்வாகனங்கள் செல்லும் போது, கான்கிரீட் கலவையை சாலையில் கொட்டிச்செல்கின்றன. சாலையில் கலவை இறுதி மேடாகி விடுவதால், விபத்து நடக்கிறது.- மோகன்ராஜ், காரமடை. தரமற்ற பணி
புலியகுளம், மசால் வீதியில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. குழாய் உடைப்பை சரிசெய்த பணியாளர்கள், குழியை சரியாக மூடவில்லை. வண்டிகள் செல்வதால், மீண்டும் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- நெல்சன் வில்லியம்ஸ், புலியகுளம். மாணவர்கள் பாதிப்பு
மசக்காளிபாளையம், விஷ்ணு வித்யாலயா பள்ளியில், சாலையோரம் மலை போல குப்பை குவிந்துள்ளது. இதனால், அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.- ரோகித், மசக்காளிபாளையம். சாலையெங்கும் பள்ளம்
பன்னீர்மடை, முல்லை நகரில், சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையெங்கும் பெரிய, பெரிய குழிகளாக காணப்படுகின்றன. மழைக்காலங்களில் இக்குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.- முரளி, முல்லைநகர். மணலில் சறுக்கும் வாகனங்கள்
சமீபத்தில் பெய்த மழைக்கு, சாலையோரங்களில் பெருமளவு மண் சேர்ந்துள்ளது. பைக்கில் செல்வோர் சறுக்கி விழுகின்றனர். அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம் பகுதியில் இதனால் அதிக விபத்து ஏற்படுகிறது.- ராம், பீளமேடு. சாலையை மறைக்கும் புதர்கள்
சத்தி ரோடு, அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் முதல், காளப்பட்டி பிரிவு பகுதி வரை, சாலை நடுவே கோரைப்புற்கள் அதிகம் வளர்ந்துள்ளது. திருப்பத்தில், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.- ஜெய்கணேசன், சரவணம்பட்டி. சேதமடைந்த மின்கம்பம்
கணபதி, 19வது வார்டு, சி.எம்.எஸ்.பள்ளி பின்புறம், அலமேலு மங்காபுரம், மூன்றாவது வீதியில் உள்ள, 'எஸ்.பி -41, பி- 4' என்ற எண் கொண்ட கம்பம் மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன.- ராஜம்மாள், கணபதி. பல மாதங்களாக எரியா விளக்கு
குறிச்சி, 96வது வார்டு, ரவுண்ட் ரோட்டில், ' எஸ்.பி - 3, பி-12' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியில் செல்ல அச்சமாக உள்ளது.- சுரேந்திரன், குறிச்சி. தொங்கிய நிலையில் தெருவிளக்கு
போத்தனுார், செட்டிபாளையம் சாலை,விநாயகர் கோவில் வீதியில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கை சரியாக பொருத்தவில்லை. விளக்கு தொங்கிக் கொண்டிருக்கிறது.- பத்ரி, போத்தனுார். மோசமான சாலை
சேரன்மாநகர், 22வது வார்டு, குமுதம் நகர், மின்கம்பங்கள் 11 மற்றும் 13ல் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. தார் சாலை அமைக்காததால், மழைக்காலங்களில் மண்சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.- கேசவன், சேரன்மாநகர். சாலையில் ஓடும் கழிவுநீர்
காந்திபுரம், 100 அடி ரோடு, கமலா ஸ்டோர் முன்பு சாலையில் திறந்தவெளியில் கழிவுநீர் செல்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் நீரில் கொசு உற்பத்தியும் அதிகம் உள்ளது.- கார்த்திக், காந்திபுரம்.