கோவை: கோவை மாவட்டத்தில் 32.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 29.59 லட்சம் பேருக்கு வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வெளியூர், வெளிமாவட்டங்கள், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வசிக்கின்றனர். இவர்கள் தொழில் நிமித்தமாகவோ அல்லது சொந்தமாக வீடு கட்டியோ, இங்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்திருக்கின்றனர். இவர்கள், இதற்கு முன் வசித்த இடத்தில் ஓட்டுரிமை இருக்கிறது. இப்போது அங்கு படிவம் வழங்க வாய்ப்பில்லை. தற்போது வசிக்கும் இடத்தில் வாக்காளராக இணைய வேண்டும். அதற்குரிய படிவத்தை வழங்கி, பூர்த்தி செய்து பெற்று, அவர்களுக்கான ஓட்டுரிமை பறிபோகாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், இவர்கள், 2024 லோக்சபா தேர்தல் வரை அவர்கள் தங்களது ஓட்டை பதிவு செய்திருக்கின்றனர். இடப்பெயர்வு காரணமாக, ஓட்டுரிமையை இழக்க நேரிடுமோ என்கிற அச்சம் வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்; அதில் பெயர் இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்யலாம் என ஆணையம் தரப்பில் சொல்லப்படுகிறது. இது, ஏற்புடையதல்ல. இதுநாள் வரை ஓட்டுப்பதிவு செய்து வந்தவர்கள், இடம் பெயர்ந்திருக்கின்றனர் என்கிற ஒரே காரணத்துக்காக, மேல்முறையீடு செய்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவது சரியான நடைமுறை அல்ல. மேலும், மேல்முறையீடு மனு ஏற்கப்பட்டதா என்பதும், இறுதி பட்டியல் வெளியிட்ட பிறகே அறிய முடியும். அதில், பெயர் விடுபட்டு இருந்தால் யார் பொறுப்பு என்கிற கேள்வியும் எழுகிறது. எனவே, முகவரி மாறிச் சென்றவர்களுக்கு படிவங்கள் வழங்கி, அவர்களது பெயர்களை பட்டியலில் சேர்க்க துரித நடவடிக்கை எடுப்பது அவசியம். உதாரணத்துக்கு, 2024 லோக்சபா தேர்தல் சமயத்தில், ஒருவர் தனது குடும்பத்தினருடன் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாடகை வீட்டில் வசித்திருக்கிறார். தற்போது சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சொந்தமாக வீடு கட்டி, இடம் பெயர்ந்திருக்கிறார். அவரது குடும்பத்தினரின் ஓட்டுகளை, பழைய இடத்தில் நீக்கி விட்டு, புதிய இடத்தில் சேர்க்க வேண்டும். பழைய இடத்தில் படிவம் வழங்க வாய்ப்பில்லை என்பதால், பட்டியலில் தானாக நீங்கி விடும். அதேநேரம், முகவரி மாறிச் சென்றவர்களிடம் படிவம் பெற்றாலும், வரைவு பட்டியல் வெளியிட்ட பிறகே சேர்க்கப்படும் என கூறுவது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. அவர்களிடம் படிவங்கள் பெற்று, தனியாக பரிசீலனை செய்து, வரைவு பட்டியலில் வெளியிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாக்காளர்கள் விரும்புகின்றனர்.
எஸ்.எம்.எஸ்., அனுப்புவது சிறப்பு
வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று படிவம் வழங்க வேண்டும். அதிலுள்ள 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை சரிபார்த்து திருப்பி பெறும்போது மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும். இன்னொரு பிரதியில் ஓட்டுச்சாவடி அலுவலர் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். இதுவே தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல். சில இடங்களில், கவுன்சிலர்கள் அல்லது குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அலுவலர்கள், மொத்தமாக படிவத்தை கொடுத்து விடுகின்றனர். வாக்காளர்களுக்கான பிரதியில் கையெழுத்திட்டுக் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். அதனால், வரைவு பட்டியல் வெளியிடும் வரை, பட்டியலில் பெயர் சேருமா சேராத என்கிற குழப்பம் வாக்காளர்களிடம் கணப்படுகிறது. எனவே, பூர்த்தி செய்த படிவத்தை ஸ்கேன் செய்து செயலியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பதிவேற்றம் செய்ததும், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் மொபைல் போனுக்கு, 'நீங்கள் கொடுத்த வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் பெறப்பட்டது' என, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், ஓட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிற நம்பிக்கை ஏற்படும். இல்லையெனில், பட்டியலில் பெயர் இருக்குமா, நீக்கி விடுவார்களா என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.