உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மறையூர் சந்தன மரக்கடை விற்பனை; வாளையார் மரக்கிடங்கில் துவக்கம்

மறையூர் சந்தன மரக்கடை விற்பனை; வாளையார் மரக்கிடங்கில் துவக்கம்

பாலக்காடு;வனத்துறையின் வாளையார் மர கிடங்கில், மறையூர் சந்தன மரக்கட்டைகள் விற்பனை துவங்கியுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை எல்லை பகுதியாக வாளையார் உள்ளது. இங்கு வனத்துறையின் மர கிடங்கு உள்ளது. மாநிலத்தில் மிகப்பெரிய தேக்கு மர விற்பனை செய்யும் மையமாக விளங்குகிறது. இங்கு, மாதத்துக்கு, 3 கோடி ரூபாய்க்கு மேல் தேக்கு மரத்துண்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.இங்கு அதிகப்படியானோர் மரம் வாங்கி செல்வதால், மறையூர் சந்தன மரக்கட்டைகளையும் விற்பனை செய்ய வனத்துறையினர் முடிவெடுத்தனர்.தொடர் நடவடிக்கைகளுக்குப் பின், நேற்று முன்தினம் முதல் மறையூர் சந்தன மரக்கட்டைகள் விற்பனை துவங்கியுள்ளது. முதல் நாள் விற்பனையில், சுமார் ஆறு கிலோ சந்தன மரக்கட்டை விற்கப்பட்டது.இதுகுறித்து, மர கிடங்கு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டு ரக சந்தன மரக்கட்டைகள் இங்கு விற்பனைக்கு உள்ளது. முதல் ரகம் வரி உட்பட கிலோவுக்கு, 21,700 ரூபாய். இரண்டாவது ரகம் வரி உட்பட, 17,700 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, தைலம் மரக்கட்டைகள் தரம் மற்றும் நறுமணத்தின் அடிப்படையில், விற்கப்படுகின்றன. 50 கிராம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த, 26 ஆண்டுகளாக செயல்படும் இந்த மரக்கிடங்கில், சந்தன மரக்கட்டை விற்பனை துவங்கப்பட்டுள்ளது.தனி நபர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கும், நேரில் வந்து சந்தன மரத்துண்டுகளை வாங்கலாம். தனி நபர்களுக்கு ஒரு கிலோ வரை வழங்கப்படுகிறது. அதற்கு ஆதார் அடையாள அட்டை மட்டும் ஒப்படைத்தால் போதும். வழிபாடு ஸ்தலங்களுக்கு சந்தன கட்டை தேவைப்பட்டால், விண்ணப்பம் அளிக்க வேண்டும்.அவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். வரி உட்பட சந்தன கட்டைக்கான தொகையை கருவூலம் வாயிலாக செலுத்தி, பெற்று செல்லலாம்.சந்தன கட்டை விற்பனையை உலகமயமாக்குதல், சிறிய அளவிலான நுகர்வோருக்கு கிடைக்க செய்தல், சட்டவிரோத கடத்தலைத் தடுக்க, மரக்கிடங்கில் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி