கோவை: கொள்ளை, திருட்டு முயற்சிகளை தடுக்க அண்டை வீட்டில் இருப்பவர்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, அபார்ட்மென்டுகளில் வசிப்போர் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கோவை, கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், நகை, பணம்கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் கொள்ளை நடந்தும், கொள்ளையர் வந்து சென்றதை யாரும் கண்டுகொள்ளவில்லை. கொள்ளையின் போது, வீட்டின் கதவு, பீரோ உடைக்கும் சத்தம்,பக்கத்து வீடுகளில் இருந்த ஒரு சிலருக்கு கேட்டுள்ளது. ஆனால், அவர்கள் வெளியில் வந்து பார்க்கவில்லை. அவ்வாறு பார்த்திருந்தால் கொள்ளை நடப்பது தெரிந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கலாம். கொள்ளையர் மூன்று மாதங்களாக, குனியமுத்துாரில் தங்கியிருந்துள்ளனர். ஆனால், அவர்கள் குறித்த எந்த தகவலும் பக்கத்து வீடுகளில் வசித்தவர்களுக்கு தெரியவில்லை. போலீசார் அவர்களை சுட்டு பிடித்த பின்னரே, அவர்கள் கொள்ளையர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அருகில் வசிப்பவர்கள் குறித்தும் அறிந்து வைத்திருப்பது அவசியம் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:
பெரும்பாலான பொதுமக்கள், இன்று மொபைல்போன் அல்லது டி.வி., நிகழ்ச்சிகளில் மூழ்கி விடுகின்றனர். அண்டை வீட்டார் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காண்பிப்பதில்லை. பத்துக்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருந்தால், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டை வாடகைக்கு விட்டால், யார் குடியிருக்கின்றனர் என்ற தகவலை, சேகரித்து வைக்க வேண்டும். குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளவர்கள் குறித்து தகவல் திரட்ட வேண்டும். அதற்காக அவர்களை துன்புறுத்தக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள், பாதுகாப்பை பலப்படுத்த குடியிருப்பு வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதை முறையாக கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.