சாமியார் வேடத்தில் வேல் திருடியவர் கைது
கோவை; மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் மடத்தில் சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பிலான 2.5 கிலோ எடையுள்ள வெள்ளி வேல் இருந்தது. கடந்த 2ம் தேதி இந்த வெள்ளி வேல் திருட்டு போனது. அங்கு இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது, சாமியார் வேடத்தில் இருந்த ஒருவர் வேலை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. சம்பவம் குறித்து நிர்வாகிகள் வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, வேலை திருடிச்சென்றது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசா சர்மா, 57 என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சாமியார் வேடம் அணிந்து, பல்வேறு ஊர்களில் உள்ள மடங்களுக்கு சென்று தங்கி, திருட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது.