பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், பரபரப்பான நேரத்தில் நகருக்குள் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து பாதிக்கிறது.பொள்ளாச்சி நகரில், பிரதான சாலைகள் விரிவுபடுத்தப்பட்டாலும், ஆக்கிரமிப்பு காரணமாக, சீரான போக்குவரத்து தடைபடுகிறது. மாறாக, முக்கிய வீதிகளிலும் ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது.இதனால், பரபரப்பான நேரத்தில், கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையக் கூடாது என, போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால், சமீபகாலமாக, நகரப்பகுதியில் பரபரப்பான நேரத்தில் கனரக வாகனங்கள் இயக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.இதனால், அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கின்றனர். குறிப்பாக, இந்த நேரங்களில் மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் என, அனைவரும் சிரமப்படுகின்றனர்.மக்கள் கூறியதாவது:பரபரப்பான நேரத்தில், நகருக்குள் கனரக வாகனங்கள் அத்துமீறி இயக்கப்படுகின்றன. சில வழித்தடங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி விட்டு, பொருட்களை இறக்க முற்படுகின்றனர்.குறிப்பாக, கடைவீதி, தெப்பக்குளம் வீதி, ராஜாமில் ரோடு, மார்க்கெட் ரோடு, வெங்கடேசா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு லாரிகளை நடுரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.கனரக வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்புகளை இடம்பெறச் செய்ய வேண்டும். மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.