கோவை: நீச்சல் குளம் நீர்தரத்தை உயர்த்த புதிய தரநிலைகள் அடங்கிய, வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டம், நேற்று கோவை ஓசூர் சாலையில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில் நடந்தது. இந்திய தர நிர்ணய அமைப்பு (பி.ஐ.எஸ்.,) சார்பில், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், இக்கூட்டம் நடந்தது. பி.ஐ.எஸ்., கோவை கிளை முதுநிலை இயக்குனர் பவானி கூறுகையில், '' மாதந்தோறும் 'மானக்மந்தன்' எனும் நிகழ்வை நடத்துகிறோம். அதில், புதிய தரநிலைகள், அல்லது திருத்தம் செய்யப்பட்ட தரநிலைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துவோம். ''அதில் பெறும் கருத்துகளை தொழில்நுட்ப குழுவிற்கு அனுப்புவோம். அதன்படி, புதிய திருத்தங்களுடன் வரைவு அறிக்கை பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்,'' என்றார். பி.ஐ.எஸ்., கோவை கிளை இயக்குனர் ஹேமலதா கூறுகையில், ''நீச்சல் குளத்தில் பயன்படுத்தப்படும் நீரின் தரநிலை ஆரோக்கியத்தை மையமாக கொண்டு, வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த வல்லுநர்கள், பொதுமக்கள் வரைவை படித்து 2026, ஜன., 12ம் தேதி வரை இணையத்தில், கருத்து பதிவு செய்யலாம்,'' என்றார். நிகழ்வில், கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர்கள் சங்க தலைவர் செவ்வேல், பி.ஐ.எஸ்., கோவை கிளை விஞ்ஞானி ரினோ ஜான், நீச்சல் பயிற்சியாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.