மேட்டுப்பாளையம்: 'மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால்,
போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர்
எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலில், மேட்டுப்பாளையம் நகரம் அமைந்துள்ளது. தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில், மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். மேட்டுப்பாளையத்தில், 50 ஆண்டுகளுக்கு முன், கோவை - ஊட்டி சாலைகள் போடப்பட்டன. அப்போது ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள், எவ்வித சிரமம், இல்லாமல் சென்று வருகின்ற அளவுக்கு சாலைகள் இருந்தன. காலப்போக்கில் சாலையின் ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்தனர். வாகன நெரிசல்
கடைகளுக்கு, பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள், தங்களுடைய வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி சென்றனர். இதனால், மேட்டுப்பாளையம் நகரில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. ஒரு முறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அது சரி செய்ய, இரண்டு மணி நேரத்துக்கு மேலாகிறது. மேட்டுப்பாளையம் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணியர் கோரிக்கை விடுத்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், ஊட்டி மற்றும் கோவை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்நிலையில், லோக்சபா தேர்தல் வந்ததால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் சாலையின் ஓரங்களில் தற்காலிக கடைகள் அதிகரித்து வந்தன. சாலை பாதுகாப்பு கூட்டம்
கோவை --- ஊட்டி சாலை ஓரங்களில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து, ஓடந்துறை பஞ்சாயத்து எல்லை வரை, சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை சாலையின் இருபுறம் உள்ள, ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை துறை வாயிலாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என, அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றவில்லை. அதனால் நேற்று காலை, 9:30 மணிக்கு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துவங்கின. சாலையின் ஓரங்களில் இருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள், பொக்லைன், டிராக்டர், டிப்பர் லாரிகள் வாயிலாக அகற்றப்பட்டன. போலீஸ் நடவடிக்கைசாலையின் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில், யாரேனும் ஆக்கிரமிப்பு செய்து, கடை வைத்தால், அவர்கள் மீது சட்டப்படி போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே யாரும் ஆக்கிரமிப்புகளை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கோவை சாலையில், நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் பணிமனை வரை, சாலையின் இருபக்கம் உள்ள ஆக்கிரமிப்புகள், அடுத்த கட்டமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். -முரளிகுமார்,உதவி கோட்ட பொறியாளர்,தேசிய நெடுஞ்சாலைத்துறை