மேட்டுப்பாளையம்;வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவியருக்கான எறிபந்து மற்றும் இறகுபந்து விளையாட்டு மைதானம் புதிதாக திறக்கப்பட்டது.காரமடை அருகே வெள்ளியங்காட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. ஆசிரியர்கள், மாணவருக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, விளையாட்டிலும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். இந்நிலையில், மாணவியர், எறிபந்து மற்றும் இறகு பந்து விளையாடுவதற்கு, போதிய விளையாட்டு மைதானம் இல்லாமல் இருந்தது. கோவையை சேர்ந்த விஜயலட்சுமி ராமகிருஷ்ண அறக்கட்டளை நிர்வாகிகளிடம், விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து, பள்ளி அருகே பாறை நிறைந்திருந்த பகுதியை, இந்த அறக்கட்டளை நிர்வாகிகள் எறிபந்து மற்றும் இறகு பந்து விளையாட்டு மைதானமாக மாற்றி அமைத்தனர். இதன் திறப்பு விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன் வரவேற்றார். விளையாட்டு மைதானத்தை, விஜயலட்சுமி ராமகிருஷ்ண அறக்கட்டளை அறங்காவலர் துரைசாமி திறந்து வைத்தார். பாலகோபால் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் திருவேங்கடசாமி, கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில், பாலகோபால், பாலகிருஷ்ணன், விஜயலட்சுமி ராமகிருஷ்ண அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், நிர்வாக உறுப்பினர் உஷாராணி, நிர்வாக அறங்காவலர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.