உடுமலை:மாவட்ட அளவில் முன்மாதிரியாகும் வகையில், உடுமலை வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.புதிய கல்வியாண்டு, 2024 - 25க்கான மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதலே துவங்கி விட்டது. மார்ச் 1ம் தேதி முதல் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சேர்க்கையை துவங்குவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில், உடுமலை சுற்றுப்பகுதியிலும் சேர்க்கை நடக்கிறது.வழக்கமான முறையில் மட்டுமின்றி, எண்ணிக்கை குறைவான பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கும், சேர்க்கைக்கான விழிப்புணர்வு தீவிரமாக மேற்கொள்வதற்கும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகம், சீருடை உட்பட கல்விக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், நலத்திட்டமாகவே வழங்கப்படுகிறது.இதுதவிர, மாணவர்களின் உயர்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. பொருளாதார நிலையால், தங்களின் கனவு படிப்பை தொடர முடியாமல், இடைநிற்றலுக்கு ஆளாகும் பல மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்பாகவும், பெற்றோர் அரசுப்பள்ளிகளை தற்போது பார்க்கின்றனர்.அரசு பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தும் வகையில் ைஹ-டெக் வகுப்பறைகள், கல்லுாரி களப்பயணம், தனித்திறன்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு மன்றங்களும் இருப்பதால், பெற்றோரின் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்திலும், அரசுப்பள்ளிக்கான சேர்க்கை தீவிரமாக நடக்கிறது. சேர்க்கையின் ஆரம்பமே அரசு பள்ளிகளின் நிலையை வெளிப்படுத்தும் வகையில், உடுமலை வட்டாரம், அதிக மாணவர் எண்ணிக்கையுடன் முன்மாதிரியாக மாறியுள்ளது.திருப்பூர் மாவட்ட அளவிலான சேர்க்கையில், கடந்த பத்து நாட்களில் உடுமலை வட்டாரம் இரண்டாவது இடத்திலும், பல்லடம் முதல் இடத்திலும் உள்ளது.உடுமலை வட்டாரத்தில், புதிய கல்வியாண்டில் முதல் வகுப்பு சேர்வதற்கான இலக்கு, 1,335 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது, 164 பேர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், கே.ஜி., வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை, ஒன்றாம் வகுப்பு உட்பட மொத்தமாக, 280 மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை அரசுப்பள்ளிகளில், 2,026 மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்துள்ளனர். வட்டாரம் வாரியாக பல்லடம் 306 எனவும், உடுமலை இரண்டாவது இடத்திலும் (280), திருப்பூர் வடக்கு, 260 என மூன்றாவது இடத்திலும் சேர்க்கையில் உள்ளது. நேரடி விழிப்புணர்வு
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:உடுமலையில் சேர்க்கையின் போது மட்டுமின்றி, ஒவ்வொரு கூட்டத்திலும் பெற்றோரிடம் அரசுப்பள்ளிகளில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.அரசின் காலை உணவு திட்டம் உட்பட பலவும், பெற்றோரின் நம்பிக்கையை பெற்றுள்ளதால், சேர்க்கை அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்களை பதிவு செய்துள்ளனர்.இப்போதும் ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். புதிய கல்வியாண்டு துவங்குவதற்குள் மேலும் சேர்க்கை பதிவு அதிகரிக்கும்.இவ்வாறு கூறினர். பள்ளியை பார்வையிடுங்க!
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளை நேரடியாக பெற்றோர் சென்று பார்வையிட வேண்டும். அங்குள்ள வசதிகள், வகுப்புகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.பாடம் நடத்தும் முறைகள், கற்றல் உபகரணங்கள் என அனைத்திலுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தேவைக்காக பள்ளிகளில் நிறைய வசதிகள் செய்யப்படுகின்றன.இதை பெற்றோர் தெரிந்துகொண்டாலே, மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள்.இவ்வாறு கூறினர்.