| ADDED : நவ 17, 2025 02:05 AM
கோவை: பிரதமர் வருகையை முன்னிட்டு, கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாகன நிறுத்தத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய இயற்கை கூட்டமைப்பு சார்பில், வரும் 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, கோவை கொடிசியா வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார். இதற்காக வரும், 19ம் தேதி மதியம் 12.30 மணிக்கு கோவை வருகிறார் பிரதமர். மாலை 3:30 மணிக்கு திரும்பி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, வரும் 20ம் தேதி வரை விமான நிலைய முனையம் மற்றும் 'ஒய்' சந்திப்பில், இரவில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறும் வாகனங்கள் அப்புறப்படுத்துவதுடன், அபராதமும் விதிக்கப்படும். நாளை காலை 6:00 முதல், வரும், 19ம் தேதி காலை 6:00 மணி வரை, இந்த தடை இருக்கும். மூன்று நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றி, இறக்க தடையில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், விமான நிலைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.