நமது நிருபர் குழுமாட்டுப் பொங்கலை முன்னிட்டு, கிராமங்களில் மாடுகளை குளிப்பாட்டி, பொங்கல் வைத்து படையல் இட்டு, கால்நடைகளுக்கு பொங்கல் வழங்கினர்.பொங்கல் விழாவின் மூன்றாம் நாள், மாட்டுப்பொங்கல். விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டினர். அதைத் தொடர்ந்து பொங்கல் வைத்து, படையலிட்டு கால்நடைகளுக்கு, பொங்கல், பழங்களை வழங்கி வழிபட்டனர்.சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், ஆலாங்கொம்பு, வீராசாமி நகர், மோத்தேபாளையம், வெள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அதே போன்று காரமடை மேற்கு பகுதியில் உள்ள விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை குளிப்பாட்டி வர்ணம் தீட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். சூலுார்
சூலூர் பொங்கல் விழா குழு சார்பில், மூன்று நாட்கள் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முன்னதாக, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாட்டுக்கு பாட்டு, சிறு நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, உறியடித்தல், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.இதேபோல், சின்னியம்பாளையம், ராவத்தூர், ரங்கநாத புரம் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழாவை ஒட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தன. பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 135 அடி உயர பொங்கல் பானை வரைந்து, அதற்கு வண்ணம் தீட்டி, மாணவ, மாணவியர் அழகு படுத்தி இருந்தனர். அனைவரும், 16 வகையான பேறுகளை பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டி, 16 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர் அன்னம் மற்றும் போலீசார் குடும்பத்துடன் பங்கேற்றனர்.சூலூர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் வைத்து வழிபாடுகள் நடந்தன. எஸ்.ஐ., க்கள் ராஜேந்திர பிரசாத், விக்னேஷ், வெங்கடேஷ் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.கிருஷ்ணாபுரம் சித்தி விநாயகர் கோவிலில், 10ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. வழுக்கு மரம் ஏறுதல், இளவட்ட கல் தூக்குதல், பெண்கள், சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. அனைவரும் உற்சாகமாக பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, சின்னியம்பாளையம், அரசூர், வாகராயம் பாளையம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, மலர் மாலை அணிவித்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மரியாதை செலுத்தினர்.மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கோவை ரூரல் எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவின் படி, மேட்டுப்பாளையம் டி.பி.எஸ்., பாலாஜி மேற்பார்வை மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவை முன்னிட்டு மகளிர் போலீசார் ரங்கோலி கோலமிட்டு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தை அழகுப்படுத்தினர். பின் பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து அருகே உள்ள மகாஜன மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள சிறு குழந்தைகளுக்கு, விளையாட்டு போட்டிகள் நடந்தன.இவ்விழாவில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கற்பகம், சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தலைமை போலீசார் கீதா, லதா மேரி, ஸ்வேதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அன்னுார்
அன்னூர் தாசபளஞ்சிக சேவா சங்க வளாகத்தில் பொது பொங்கல் வைக்கப்பட்டது. பெண்கள் கும்மியடித்து அசத்தினர். இதையடுத்து சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு கோலப்போட்டி, லக்கி கார்னர், கண்ணை கட்டிக் கொண்டு நடத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரவி, பொருளாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.அன்னூர், அவிநாசி ரோடு, உப்பு தோட்டம் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. நான்கு வீதிகளில் 152 பேர் கோலப்போட்டியில் பங்கேற்றனர். முதல் ஆறு இடம் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.சிறுமியருக்கான ஓவியப்போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் வாலிபர் சங்க நிர்வாகிகள் அஜித்குமார், சுகுமார், கிளைத்தலைவர் பாலசுப்ரமணியம், செயலாளர் மனோஜ், கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்பட அனைத்து போலீசாரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.சொக்கம்பாளையம், குமாரபாளையம், பொகலூர், பசூர், செம்மாணி செட்டிபாளையம், உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொது பொங்கல் வைத்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு கும்மியடித்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர். கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.