தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, கோவையில் கலெக்டர் அலுவலக வளாகம், மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லுாரி, தனியார் நிறுவனங்களில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவைப்புதுார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிராமிய பொங்கல் கொண்டாடப்பட்டது. பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.கல்லுாரி வளாகத்தில், கிராமிய சூழலை மாணவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.பொங்கல் வைக்கும் போட்டி, உறி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, இளவட்டக்கல் துாக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தன. கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரி அறங்காவலர் சூர்யகுமார், முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். கற்பகம் பல்கலை
இப்பல்கலையில், பொங்கல் விழாவை துணைவேந்தர் வெங்கடாசலபதி துவக்கி வைத்தார்.பொங்கல் வைத்தல், கோலமிடுதல், நாட்டுப்புற நடனமாடுல்,உரியடித்தல், கயிறு இழுத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன. சிலம்பம் மற்றும் ஒற்றைக்கம்பு வீச்சுப் போட்டிகளில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.மாணவர்கள் வள்ளிக்கும்மி நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும், விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன. அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி
புலியகுளம் அரசு மகளிர் அறிவியல் கல்லுாரியில், பொங்கல் விழாவை அனைவரும் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர். வளாகம் முழுவதும் வண்ண கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு செய்தனர். மாணவிகள் ஆர்வத்துடன் பாரம்பரிய உடைகளில் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் வீரமணி, தமிழ்த்துறை தலைவர் புவனேஸ்வரி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரி
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், பாரம்பரியப் பண்பாட்டு விழாவாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பட்டிமன்றம், கிராமிய நடனங்களோடு பொங்கல் வைத்துக் மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். கல்லுாரியெங்கும் வண்ணக் கோலங்களோடு மாணவிகளின் மகிழ்ச்சி ஆரவாரமும் சேர்ந்து கொள்ள, பொங்கல் விழா களைகட்டியது. கோவை அரசு கலை கல்லுாரி
கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் துறை வாரியாக, தனித்தனியாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் வந்த மாணவர்கள், நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்து நினைவுகளை சேகரித்துக்கொண்டனர்.பொங்கல் வைத்தல், ரங்கோலி, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் உலகி, அரசியல் அறிவியல் துறைத்தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி
கல்லுாரி மாணவ மாணவியர் வேட்டி சட்டை, சேலைகளை அணிந்து பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தனர்.பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. பம்பரம் விடுதல், பல்லாங்குழி, ஐந்து கல், பறையடித்தல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும்; அம்மியில் மஞ்சள் அரைத்தல், உலக்கையில் அரிசி குத்தல், மருதாணி வைத்தல், பூ கட்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்பத்துடனே பிறந்து, தொழில்நுட்பத்துடனே வாழும் இன்றைய தலைமுறையினருக்கு, இந்த விளையாட்டுக்கள் புது உற்சாகம் தந்தன.கிராமிய ஆடை அலங்கார போட்டி நடத்தப்பட்டு, அழகிய தமிழ் மகன், அழகிய தமிழ் மகள் பட்டங்களுக்கு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு, முதல்வர் சிவக்குமார் ரொக்கப்பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிர்மலா மகளிர் கல்லுாரி
இக்கல்லுாரியில், தமிழ்த்துறையுடன் இணைந்து அனைத்துத் துறைகளும் இணைந்து பொங்கல் திருநாளை கொண்டாடினர்.மாணவிகள், நாட்டுப்புற நடனம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடினார்கள். உறியடித்தல், பறையடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.கல்லுாரி செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரி பியோலா உட்பட அனைவரும் பங்கேற்றனர்.