தென்னை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை
கோவை: கோவை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்தன் அறிக்கை: வடகிழக்கு பருவமழை டிச., வரை நீடிக்கும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கன மழை, புயல் ஆகியவற்றால் தென்னை மரங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிவேக புயலுக்கு முன் தேங்காய், இளநீரை அறுவடை செய்வதால், மரத்தின் பாரத்தைக் குறைத்து, மரங்கள் வேரோடு விழுவதைத் தவிர்க்கலாம். மரத்தின் கீழ் சுற்றில் உள்ள கனமான, பழைய ஓலைகளை வெட்டி அகற்றுவதால், மரத்தின் தலைப்பகுதியில் உள்ள சுமையைக் குறைக்கலாம். மரத்தின் அடிப்பகுதியைச் சுற்றி மண் அணைத்து, வேர் பகுதியை பாதுகாக்கலாம். முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும். வேர் அழுகல் நோய் பாதிப்பைத் தவிர்க்க ஆழமாக உழவு செய்தலைத் தவிர்க்க வேண்டும். தண்டுப்பகுதியில் அதிக ஈரப்பதம் காரணமாக, பூஞ்சை மற்றும் பாசி வளர்வதைத் தடுக்க சுண்ணாம்பு அடிக்க வேண்டும். மரத்தின் கொண்டை பகுதியில் காணப்படும் பன்னாடை, காய்ந்த மட்டைகள், குரும்பைகள் முதலியவற்றை தேங்காய் அறுவடையின்போதே அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.