கோவை:பிரதமர் மோடி இன்று கோவை வரும் நிலையில், கல்லுாரி மாணவர்கள் காலை 8:30 மணிக்குள் வர அறிவுறுத்த வேண்டுமென, முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில், இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இச்சூழலில், தேவையற்ற சிரமங்களை தவிர்க்க, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் தரப்பிலும், மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை வடகோவை, 100 அடி ரோடு மேம்பாலம், நவஇந்தியா மேம்பாலம், புரூக் பீல்டு ரோடு, அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் ஆகிய முக்கிய சாலைகள், பாதுகாப்பு கருதி வாகனங்கள் செல்ல மதியம், 2:00 முதல் இரவு, 8:00 மணி வரை தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலைப்பொழுதில், போலீசார் தரப்பில் ஒத்திகை செயல்பாடுகள் நடைபெறும். ஆகவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் மதியம், 1:15 மணிக்கு முடியும் சூழலில், ஆசிரியர்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீடு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை உள்ளதால், பெற்றோர்கள் மாணவர்களை முடிந்தவரை நேரில் அழைத்து செல்லவும், பள்ளிகள் தரப்பில் வாய்வழி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
'சீக்கிரம் வர வேண்டும்'
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''போலீசார் சார்பில், தேவையான பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை சார்பில், எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை. தேர்வுகள் காலை துவங்கி, மதியம் நிறைவு பெறுவதால் சிக்கல் எழ வாய்ப்பில்லை. 19ம் தேதி (நாளை) பிரதமர் மோடி செல்லும் வழியில் உள்ள, குறிப்பிட்ட மையங்களை சேர்ந்த மாணவர்கள் மட்டும் சற்று முன்னதாக பள்ளிக்கு வர, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்,'' என்றார்.