| ADDED : டிச 05, 2025 06:55 AM
கோவை தினமலர் எடுத்த முன்முயற்சி விளைவாக, மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை, வரும் செவ்வாய் முதல் மீண்டும் தொடர்ந்து நடத்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேயர் ரங்கநாயகி இந்த தகவலை நமது நிருபரிடம் தெரிவித்தார். 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் காரணமாக மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் நான்கு மாதங்களாக ரத்து செய்யப்பட்ட நிலையில், முகாம் முடிந்தும் கூட்டம் நடக்காததால் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மாநகராட்சியில், 100 வார்டுகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. அங்கு அதிகாரிகள், அலுவலர்கள் முகாமிட்டதால், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய் தோறும் நடந்துவந்த மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடக்கும் இக்குறைதீர் கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் அடிப்படை பிரச்னைகளை பொது மக்கள் நேரடியாக முன்வைத்தனர்; தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பும் இருந்தது. இதனால், குடிநீர், ரோடு, தெரு விளக்கு போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் நிலை இருந்தது. இந்நிலையில், சிறப்பு முகாம் காரணமாக குறைதீர் கூட்டம் கடந்த ஜூலை, 22 முதல் ரத்து செய்யப்பட்டதால், வார்டு பிரச்னைகளை முறையிட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். மேற்கு மண்டலம், 75வது வார்டு பொன்னுசாமி நகரில் நவ. 12ம் தேதி 'உங்களுடன் ஸ்டாலின்' கடைசி சிறப்பு முகாம் நடந்தது. அது முடிந்து ஒரு மாதம் ஆக போகிறது. இருப்பினும் இதுவரை குறைதீர் கூட்டம் நடத்தப்படாததால் பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் தீர்வு காணமுடியாது சிரமப்படுகின்றனர். ”செம்மொழி பூங்கா திறப்புக்கு முன்பே இரு வாரங்களாக மண்டல உதவி கமிஷனர்கள், அலுவலர்கள் அங்கேயே முகாமிட்டிருந்தனர். அப்போதும், மண்டல, வார்டு அலுவலகங்களுக்கு அலைந்தோம். அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறோம். எனவே, குறைதீர் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும்” என வார்டுகளுக்கு விசிட் செய்த நமது நிருபர்களிடம் மக்கள் வேதனையை பகிர்ந்தனர். நிருபர் இதை மாநகராட்சி மேயர் ரங்கநாயகியிடம் தெரிவித்து கருத்து கேட்டபோது,''உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. வரும் செவ்வாய் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும்,'' என்றார்.