| ADDED : நவ 17, 2025 01:45 AM
போத்தனூர்: ரத்தினம் கல்வி குழுமத்தில் ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில், ஐடியா ஆய்வகம் மற்றும் கோமேக் தொழிற்சாலை ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த புதுமை சுற்றுச்சூழல் அமைப்பான, 'ஆர்- பேப் எக்ஸ்' ஸ்டுடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் சீதாராம் திறந்து வைத்து பேசுகையில், மாணவர்கள் புத்தகங்களை தாண்டி தங்கள் கற்றலை வளர்க்க வேண்டும். அதற்கு இத்தகைய ஆய்வகங்கள் பெரிதும் உறுதுணையாக இருக்கும், என்றார். ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில் பேசுகையில், ''நாட்டின் முதுகெலும்பு இன்ஜினியர்களே. மாணவர்கள் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு, அதனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். புதிய ஆய்வகம் துணை நிற்கும்,'' என்றார். முன்னதாக, கல்லுாரியின் தொழில்நுட்ப வளாக முதல்வர் கீதா வரவேற்றார். கல்வி குழும இயக்குனர் சீமா, முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், துணை தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தனர்.