உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துடியலுார் அருகே ரயில்வே கேட்... சரிந்தது:காத்திருந்த மக்கள் காயமின்றி தப்பினர்

துடியலுார் அருகே ரயில்வே கேட்... சரிந்தது:காத்திருந்த மக்கள் காயமின்றி தப்பினர்

பெ.நா.பாளையம்:கோவை அருகே ரயில்வே லெவல் கிராசிங்கில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, 'கேட்' திடீரென விழுந்தது. வாகன ஓட்டிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். கோவை - மேட்டுப்பாளையம் இடையே, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இங்குள்ள கேட் கீழே இறக்கப்பட்டு, ரயில்கள் சென்றவுடன், வழக்கம் போல மேலே உயர்த்தப்படும். நேற்று முன்தினம் இரவு, 9.00 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி வந்தது. வழக்கம்போல ரயில் கடந்து சென்றவுடன், மூடி இருந்த கேட்டை ஊழியர்கள் மேலே உயர்த்தினர். கார் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள், ரயில்வே லெவல் கிராசிங்கை கடந்து செல்ல துவங்கின. அப்போது, மேலே சென்ற கேட், திடீரென சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இச்சம்பவம், இரு புறங்களிலும் காத்திருந்த வாகன ஓட்டிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், ரயில்வே கேட்டுகளை தூக்கும் பல் சக்கரத்தின் உள்பகுதியில் உள்ள, 'ராடு' போன்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கேட் திடீரென சரிந்து விழுந்தது தெரியவந்தது. கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், ''இச்சம்பவத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது இரும்பு கேட் விழுந்திருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ரயில்வே லெவல் கிராசிங்கில் உள்ள அனைத்து பாதுகாப்பு கருவிகளும், பிற உபகரணங்களையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பது அவசியம். இதை ரயில்வே உயர் அதிகா ரிகள் கண்காணிக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ