பொள்ளாச்சி: சுகாதாரத்துறையில், வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு தனியாக வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் வாயிலாக, தாய்-சேய் சுகாதார சேவைகள், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தொற்று அல்லாத நோய் தடுப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், ஒன்றிய அளவில் பணியில் இருக்கும் வட்டார மருத்துவ அலுவலர்கள், அனைத்து நோய் தடுப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகள், திறம்பட செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் வாயிலாக, சுகாதார இலக்குகளை அடையச் செய்வதில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர். இவர்கள், நோய் தடுப்பு கண்காணிப்பு பணிகள், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வு, வட்டார அளவிலான ஆய்வு கூட்டம் மற்றும் இதர கள ஆய்வு போன்ற பணிகளை தினமும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு வாகன வசதி இல்லாததால், மழை உள்ளிட்ட பேரிடர் காலத்தில், உரிய இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''தாசில்தார், பி.டி.ஓ., உள்ளிட்ட பணியிடங்களுக்கு மேல், வட்டார மருத்துவ அலுவலர் பணியிடம் உள்ளது. அவ்வாறு இருந்தும், தனியாக வாகன ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வட்டார மருத்துவ அலுவலர்கள் சொந்த வாகனத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.