கோவை;அடிப்படை வசதிகள் சார்ந்து கடந்தாண்டு பெறப்பட்ட, 22 ஆயிரத்து 236 மனுக்களில், 20 ஆயிரத்து, 873 மனுக்களுக்கு மாநகராட்சி தீர்வு கண்டுள்ளது.கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பொது சுகாதாரம், ரோடு, குடிநீர் உள்ளிட்டவை அடிப்படை தேவைகளாக உள்ளன. சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் வாயிலாக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இருப்பினும், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதேசமயம், தரமற்ற கட்டுமானம் உள்ளிட்ட காரணங்களால் பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. ரோடு, தெரு விளக்கு உள்ளிட்டவை சார்ந்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக தொலைபேசி எண், 'வாட்ஸ் அப்', எஸ்.எம்.எஸ்., சேவையை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.தவிர, வாரந்தோறும் செவ்., கிழமை மேயர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படுகின்றன. இப்படி பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு, 22 ஆயிரத்து, 236 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''கடந்த 2023ம் ஆண்டில் தொலைபேசி, 'வாட்ஸ் அப்' உள்ளிட்டவை வாயிலாக, தெரு விளக்குகள் சார்ந்து, 3,985, குப்பை பிரச்னை, 3020 உட்பட, 22 ஆயிரத்து, 236 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 20 ஆயிரத்து, 873 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.''நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால், 1,363 மனுக்கள் தீர்வு காணாது நிலுவை உள்ளது,'' என்றார்.