| ADDED : நவ 17, 2025 01:57 AM
கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'கோயம்புத்தூர் பைக்கர்ஸ் கம்யூனிட்டி' உடன் இணைந்து, பைக் பேரணி நேற்று நடந்தது. போலீஸ் பயிற்சி மைதானத்தில் துவங்கிய பேரணியில், 500 பேர் பங்கேற்றனர். கொடிசியா மைதானம் வரை பேரணி நடந்தது. பேரணியை, கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் துவக்கி வைத்து பேசுகையில், ''வாகனங்களை வேகமாக இயக்குவது தான் பயணத்தை இனிமையாக்கும் என்று எண்ணக்கூடாது. நிதானமாக இயக்கினாலும், அந்தப் பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும். இளைஞர்கள் சாலைகளில் செல்லும்போது, பொறுப்புடன் வாகனத்தை இயக்கி அவர்களுக்கும் பிறருக்கும் பாதுகாப்பான சூழலை, சாலைகளில் ஏற்படுத்த வேண்டும். அதிவேகம் காரணமாக அதிக விபத்துகள் நடக்கின்றன. போதையினால், 20, சாலை விதிகளை மதிக்காததால், 10 சதவீதம் விபத்துகள் ஏற்படுகின்றன,'' என்றார். வாகனங்களுக்கு தடை பேரணியில் பங்கேற்ற ஒரு சில வாகன ஓட்டிகள், பைக்குகளின் சைலென்சர்களை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியிருந்தனர். இதனால், பேரணி துவங்கும் அப்பகுதியில் அதிக சப்தம் எழுந்தது. அந்த வாகனங்ளுக்கு சீல் வைக்க, மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் அறிவுறுத்தினார். பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அவ்வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன், பேரணியில் பங்கேற்கவும் தடை விதித்தனர்.