மனைவியை கத்தியால் குத்திய குரூர கணவர் போலீசில் சரண்
போத்தனூர்; கோவை, குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரம் கிழக்கு, செந்தமிழ் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 39; வெல்டர். மனைவி நிவேதா,33; தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். நாகராஜ் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வார். இதனால் நிவேதா அவரை பிரிந்து, உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை நிவேதா கல்லூரிக்கு, பாலக்காடு சாலையில் நடந்து சென்றார். அவரை தொடர்ந்து வந்த நாகராஜ், வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நிவேதாவின் கழுத்து, கையில் குத்தி தப்பினார்.நிவேதா சத்தமிடவும், அங்கிருந்தோர் வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே, மக்கள் நடமாட்டம் மிகுந்த காலை நேரத்தில் நடந்த இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, தப்பியோடிய நாகராஜ், குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.