| ADDED : நவ 25, 2025 06:02 AM
கோவை: பள்ளி தரத்தை உயர்த்துவதிலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி.,) வகிக்கும் பங்கு குறித்து, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பயிற்சியின் தொடர்ச்சியாக, தலைமையாசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, கோவையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், கோவையை சேர்ந்த 42 பேர், திருப்பூரை சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 56 தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. பயிற்சியில், 'எஸ்.எம்.சி., மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்வது, குழுக் கூட்டங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பெற்றோர் பங்களிப்பை மேம்படுத்தும் செயல்முறைகள் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டது' என திட்ட அலுவலர் கூறினார்.