பள்ளி சீரமைப்பு பணி; ஓடுகள் விழும் அபாயம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் அரசு பள்ளி கட்டடத்தில் முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ளாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 102 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் உள்ள இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் சீரமைப்பு பணிகள், 1.9 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.இதில், பள்ளி கட்டடத்தின் சுவர் ஓரத்தில், முறையாக கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்படாததால், ஓடுகள் நழுவி விழும் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், பள்ளி கட்டடத்தின் உள் பகுதியில் வெளிச்சத்திற்காக கண்ணாடி பதிக்கப்பட்ட ஓடுகள் அமைக்கவும் வலியுறுத்துகின்றனர்.மக்கள் கூறுகையில், 'பள்ளி கட்டடத்தின் ஓரத்தில் ஓடுகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் கான்கிரீட் எதுவும் அமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், காற்றுக்கு ஓடுகள் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி பள்ளி கட்டடத்தை முறையாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.